உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர், செப். 11- தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) இணைந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் “உணவுத் தொழில் முனைவோர் விரைவுப்படுத்தும் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 இளைஞர்களுக்கு புதிய உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன்களை பெறும் வகையில் மூன்று மாத தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் உணவுத் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்களாகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பயனாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12.09.2025 வெள்ளிக்கிழமை காலை 9.30 முற்பகல் முதல் மாலை 4.00 பிற்பகல் வரை நேர்காணல் முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், TNAPEx மூலமாகவும் நேர்காணல் நடைபெறும் நாள் அன்று நேரடியாக சென்றும் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.