அறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்த நாள்
பாபநாசம், செப். 15- திமுக நிறுவனர் அறிஞர் அண்ணாதுரையின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, சாலிய மங்கலத்தில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அம்மாப் பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், சன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று சாலியமங்கலம் அருகே தளவாய் பாளையத்திலும் அண்ணா படத்திற்கு அம்மாபேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரவுடி கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை
அரியலூர், செப். 15- அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சி என்கிற சுதாகர்(37). ரவுடியான இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்(40) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 10.9. 2023 அன்று பாஸ்கர், தனது நண்பரான கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன்(42) என்பவருடன் சேர்ந்து சுதாகரை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பாஸ்கர், அர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கை விசாரித்து வந்த அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்வாலண்டியா, குற்றவாளிகள் பாஸ்கர் மற்றும் அர்ஜுனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
பாபநாசம், செப். 15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கபிஸ்தலம் அருகே, உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த அம்மன் நகரில் வசித்து வரும் ஐயப்பன் என்பவர், நாட்டு வெடி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சில்லரை விற்பனைக்காக அரசு உரிமம் இன்றியும், அரசு அனுமதி இன்றியும் 47 மூட்டைகளை நாட்டு வெடிகளை வாங்கி, சில்லரை விற்பனைக்கென வைத்திருந்தார். நாட்டு வெடி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐயப்பனை கைது செய்ததுடன், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 47 மூட்டை நாட்டு வெடிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.