வல்லம் வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சாவூர், ஆக.31- வல்லம் வளம் மீட்பு பூங்காவில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில், வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தைச் சுற்றி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பள்ளிகள் உள்ளன. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள், வார்டு 12 இல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கையாக அமைத்து, இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த இயற்கை உரங்கள், மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை என்று நூற்றுக்கணக்கில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், நகர்ப்புற பசுமை பிரச்சாரத்தையொட்டி, இந்த வளம் மீட்பு பூங்காவில் சனிக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹிம் அபூபக்கர் தலைமையில் வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகர், கவுன்சிலர்கள் சுந்தர்ராஜ், சேகர், அன்பழகன், ஆரிப் பாட்சா, ஆரோக்கியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து, வளம் மீட்பு பூங்காவில் மகாகனி, வேம்பு, ஆலமரம், நாவல், புங்கன் என்று பலன் தரும் 250 மரக்கன்றுகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வல்லம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், பதிவறை எழுத்தர் கணேசன், பம்பு மெக்கானிக் பிரகதீஷ் மற்றும் பலர் செய்திருந்தனர்.
