tamilnadu

உலகச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியாதையை விரும்புகிறார். அது தரப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்த ஜெர்மனியின் கப்பற்படைத் தளபதி கே ஆசிம் ஷோன்பேக் பதவி விலகியுள்ளார். அவரது  கருத்துக்கு ஜெரமன் மற்றும் உக்ரைன் அரசுகளிடம் இருந்து கடுமையான கண்டனம் எழுந்ததால் அவர்  பதவி விலக வேண்டி வந்துள்ளது. பொது வாக்கெடுப்பு  மூலமாக 2014 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைந்த  கிரிமியா போன்ற பகுதிகளை உக்ரைனால் திரும்பப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொற்றி னால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.  ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்கர்கள் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் ஏமனில் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்நிலையில் அக்கூட்டணியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்துள்ளவர்களை ஏமன் ஆட்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒரு பாதுகாப்பற்ற நாட்டில் நீங்கள்  முதலீடு செய்துள்ளீர்கள். அந்நாட்டை விட்டு உங்கள்  முதலீடுகளோடு வெளியேறிவிடுங்கள் என்று குறிப்ப்பிட்டுள்ளனர்.