நவீன சலவையகம் அமைக்க ரூ.5 லட்சம் மானியம்
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக, நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு, நிதியுதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்குத் தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்குத் தேவையான நிதியில் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 5 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக அமைத்து செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
குறைதீர் கூட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூரில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 666 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மகள் கீர்த்தனா, கடந்த 20.05.2019 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், திருவிடைமருதூர் வட்டம், கோவில் சன்னாபுரம் பகுதியைச் சார்ந்த கோமதி என்பவரது தாயார் பொம்மி, பாம்பு கடித்து 05.12.2019 அன்று உயிரிழந்தார். இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், பாபநாசம் வட்டம், கம்பயநத்தம் கிராமம், நடுத்தெருவை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர், வீட்டின் பின்புறம் இருந்த ஒதியமரத்தில் 11.04.2025 அன்று இரவு பெய்த மழையினால், மின்கம்பி அறுந்து வீட்டின் இரும்புக்கதவில் விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பது தெரியாமல் கதவினை திறக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனித உயிரிழப்பிற்கான காசோலைகள் அவரது வாரிசுதாரர்களான காமாட்சிக்கு ரூ.2,67,000/- மற்றும் சரஸ்வதிக்கு 1,33,000/- என மொத்தம் ரூ.4,00,000 /-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் நிவாரணமாக வழங்கினார்.
ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 14- புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 18 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், மானியங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வதுடன், தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையயுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.