பெற்றோரை இழந்த பிள்ளைகள் சிபிஎம் மாநில செயலாளரிடம் உதவி கேட்டு மனு
கள்ளக்குறிச்சி,பிப்.23- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் திப்பரசன் பேட்டையை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி விஸ்வநாதன். அவரது மனைவி அலமேலு. இவர்களுக்குஅஸ்வின் (17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கூலித் தொழிலாளியான விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரி ழந்து விட்டார். அலமேலுவும் உடல்நிலை சரியில்லாமல் கடந்த மாதம் உயிரிழந்தார். தாய் - தந்தை இருவருமே உயிரிழந்து விட்ட தால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின் மற்றும் தங்கை பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுடைய உறவினர்கள் மும்பையில் கூலி வேலை செய்து பிழைத்து வரும் நிலையில் உறவினர்கள் ஆதரவு எதுவும் இன்றி நிர்க்கதியாக உள்ளனர். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அரசு சார்பில் இவர்கள் படிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவை யான உதவிகளை செய்ய அரசு கவனத்திற்கு கொண்டு சென்று உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை 2 குழந்தைகளும் அவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாநில செயலாளர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவி புரிவ தாக குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.
