tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி உருவாக்க கோரிக்கை

புதுக்கோட்டை, அக். 13-  24 மாவட்ட - மத்திய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து, கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஆர். கருப்பையா பேசினார். சம்மேளனத் தலைவர் தி. தமிழரசு, சம்மேளனப் பொதுச் செயலாளர் இ. சர்வேசன், துணைத் தலைவர் எம். ராசகேசி, சென்னை கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் டி. கோவிந்தராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். 24 மாவட்ட - மத்திய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து கேரளாவைப் போல தமிழ்நாடு கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட வேண்டும். உதவி மேலாளர் பதவி உயர்வில் நேரடி நியமனம் 3:1 என்பதை ரத்து செய்ய வேண்டும். வங்கி ஊழியர்களுக்கான புதிய பணியாளர் சிக்கன நாணய சங்கத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.'

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தஞ்சாவூர், அக். 13-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சோமநாதன்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35), இவரது மனைவி ரம்யா(30), மகன்கள் ராகவன் (9), தர்ஷித்(3) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில், மந்திரிப்பட்டினத்தில் உள்ள ரம்யாவின் வீட்டிற்கு சென்று விட்டு சோமநாதன்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(48), தனது உறவினர்களுடன், காரில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சோமநாதன்பட்டினம் அருகே ஆடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால், ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக, ஆரோக்கியராஜ் காரை திருப்பியுள்ளார். இதில், கார் நிலை தடுமாறி, காளிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், காளிதாசின் 3 வயது குழந்தை தர்ஷித், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரம்யா மற்றும் தர்ஷித் ஆகியோரை மீட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கும், ராகவன், காளிதாஸ் இருவரையும் தஞ்சாவூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.  தஞ்சாவூர் செல்லும் வழியில் காளிதாஸ், ராகவன் இருவரும் உயிரிழந்ததால், உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.