பயன்பாடில்லாமல் உள்ள கட்டடத்தில் அரசு அலுவலகம் கொண்டுவர கோரிக்கை
பாபநாசம், ஆக. 28- பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதன் அருகிலேயே புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாறி, ஒருங்கிணைந்த விரிவாக்க மையமாக செயல்பட்டு வருகிறது. பழைய கட்டடம் எந்த பயன்பாடும் இல்லாததால் பாழடைந்து, அதன் வளாகத்தில் செடி, கொடிகள் மண்டி, விஷ ஜந்துகள் அண்டக் கூடிய நிலையில் உள்ளது. வாயில் கேட்டும் பழுதடைந்து, பூட்டாத நிலையில் உள்ளது. இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளன. பயன்பாடில்லாமல் உள்ள கட்டடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே, பாபநாசம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பாபநாசத்தில் செயல்பட்டு வந்த வணிகவரித் துறை அலுவலகம், தஞ்சாவூர் சென்று விட்டது. இதனால் வணிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கட்டடத்தில் வணிகவரித் துறை அலுவலகம் கொண்டு வரலாம். பயன்பாடில்லாமல் உள்ள கட்டடத்தை அரசு அலுவலகம் ஏதாவது ஒன்றிற்கு பயன்படுத்த பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.