tamilnadu

img

கோவில்பத்து தெருவில் தீண்டாமைச் சுவரை அகற்றுக! திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு

கோவில்பத்து தெருவில் தீண்டாமைச் சுவரை அகற்றுக! திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு'

திருவாரூர், செப். 8-  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 14 ஆவது வார்டு கோவில்பத்து-பாதிரிபுரத்தில், பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை அகற்றிடவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது பாதையை மாற்றி, சாலை அமைத்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “வலங்கைமான் பேரூராட்சி சேனிய தெருவில் வசித்து வரும் ஜாபர் அலி, வீட்டு மனைகள் பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்.  வலங்கைமான் பேரூராட்சி 14 ஆவது வார்டு கோவில்பத்து தெருவில் பட்டியல் இன மக்கள் சுமார் 500 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகிறார்கள். இவர், இந்தப் பகுதி மக்கள் வசிப்பது தெரிய கூடாது என்பதற்காகவே (தீண்டாமைச் சுவர்) 11-அடி உயரத்தில் சுவர் எழுப்பி மறைத்துவிட்டார். மேலும் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பொது பாதையையும் அடைத்துவிட்டார். இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சார்ந்தவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவருமான கே.முரளி, அமைப்பின் சார்பாக  மேற்கண்ட பிரச்சனையில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில், திட்டமிட்டு கூலிப்படையை வைத்து தோழர் முரளி, அவரது மனைவி, அவரது தாயார் மூவரையும் தாக்கியுள்ளார்கள். தாக்கப்பட்டவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளனர்.  இதனை அடுத்து, புகார் கொடுத்தும் இதுவரையிலும் வலங்கைமான் காவல் ஆய்வாளர், தோழர் முரளி மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கியவர்களை கைது செய்யவில்லை. எனவே, தீண்டாமைச் சுவரை அகற்றியும், பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த பொது பாதையை திறந்துவிட்டு சாலை அமைத்து தர வேண்டியும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும்’’  மனுவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கும்போது அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், திருவாரூர்  நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. முரளி, மாவட்டச் செயலாளர் கே. தமிழ்மணி  உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.