நாகையில் குறுவை சாகுபடி நிலங்களை மூழ்கடித்த மழைநீர் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
நாகப்பட்டினம், அக்.24 - நாகப்பட்டினம் வட்டம், கருவேலங்கடை கிராமம், கீழ்வேளுர் வட்டம், சின்ன தும்பூர் கிராமம், திருக்குவளை வட்டம், திருவாய்மூர் ஆகிய கிராமங்களில் பெய்த கனமழையினால் குறுவை சாகு படி செய்த விளைநிலங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெள்ளியன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் தெரிவிக்கையில், “வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் நாகை, திரு வாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டம் ஆகிய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கியிருக்கிற செய்தி அறிந்தவுடன், முதலமைச்சர், அமைச்சர் களையும், வேளாண்மை துறை அதி காரிகளையும் நேரடியாக பகுதிகளுக்கு சென்று உரிய நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிட்டார். தற்போது, நாகப்பட்டினம் மாவட் டத்தில் சுமார் 30,218 ஹெக்டேர் பரப்பள வில் குறுவை, சுமார் 22,422 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப் பட்டு, அதில் சுமார் 15,484 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 14,733 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி அறுவடை செய்யாமலிருந்த நிலையில், தற்போது இரு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்ய வேண்டிய சுமார் 14,733 ஹெக்டேர் பரப் பளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சம்பா சாகுபடி செய்து வளர்ச்சி பருவத் தில் உள்ள சுமார் 22,422 ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதனை பார்வையிட்டு அதற்கான அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என்றார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணா மூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்கு நர் பா.முருகேஷ், மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், நாகப் பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வே ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சியில் ஒரே நாளில் 418 மி.மீட்டர் மழை பதிவு
திருச்சிராப்பள்ளி, அக்.24 - தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட் டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வியாழனன்று வினா டிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் வெள்ளியன்று 55,500 கன அடியாக அதி கரித்து வெளியேற்றப்படுகிறது. திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வெள்ளி யன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 48,400 கனஅடி நீர்வரத்து இருந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 23,500 கன அடியும், கொள்ளிடத்தில் 24,600 கன அடியும், கிளை வாய்க்காலில் 300 கனஅடியும் நீர் வெளி யேற்றப்படுகிறது. வியாழனன்று மாலை 430 மணிக்கு மேல் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒன்றரை மணி நேரத் துக்கு மேலாக பெய்த மழையால் தாழ்வானப் பகுதி களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்புதூர் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பீமநகர், பாலக்கரை, மேலபுதூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஜாமலை மெயின் சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. இதே போன்று கருமண்டபம் ஐஓபி நகர் பகுதியில் சாலை களை மழை நீர் மூழ்கடித்தது. துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் புளியஞ்சோலை அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி யில் உள்ள ஆலத்துடையான்பட்டி இரட்டை ஏரிகள் எனப்படும் சின்ன ஏரி- பெரிய ஏரி அடுத்தடுத்து நிரம்பின. இந்த ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் தடுப்ப ணையை தாண்டி வழிந்து ஓடுகிறது. வியாழனன்று பெய்த மழையினால் மாநகர் மற்றும் புறநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. ஒரே நாளில் 418.4 மிமீ வியாழனன்று பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்சி மாவட்டம் கல்லக்குடி 30.2, லால்குடி 10.6, நந்தியாறு அணைக்கட்டு 38.6, புள்ளம்பாடி 35.4, தேவி மங்கலம் 5.4, சமயபுரம் 32.2, வாத்தலை அணைக்கட்டு 1, கோவில்பட்டி 8.1, மருங்காபுரி 19.2, நவலூர் கொட்டப்பட்டு 34.5, துவாக்குடி 19, பொன் மலை 38.2, திருச்சி ஏர்போர்ட் 36.4 என மழை பதி வாகியுள்ளது. மாவட்டத்தில் வியாழனன்று முழு வதும் 418.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நடவு பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் ஆய்வு
திருவாரூர், அக்.24 - சிறுபுலியூர் ஊராட்சி, கூரத்தாழ் வார்குடியில் பெய்த தொடர் மழை யால் சம்பா, தாளடி பருவ நடவு செய் யப்பட்ட இளம் நாத்துகள் முழு வதும் மழைநீரில் மூழ்கின. இதனை விவசாயிகள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் சிறுபுலியூர் ஊராட்சி, பில்லூர், கொல்லுமாங்குடி, சிறுபுலி யூர் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர் களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் எம்.ராமமுர்த்தி, தலைவர் வசந்த பாலன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பி னர் வசந்த.வரதராஜன் மற்றும் நிர்வா கிகள் நேரில் சென்று விவசாயி களிடம் பாதிப்புகள் பற்றி கேட்டறிந்த னர். அப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், “வடிகால் பகுதியாக இது இருப்பதாலும், வடிகால் வாய்க்கால் களை முறையாக தூர்வாராததாலும் ஆண்டுதோறும் இப்பிரச்சனை நீடிப்பதாக வேதனையுடன் தெரிவித்த னர். சென்ற வருடம் இதுபோன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடி யிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த தால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். ஆனால் இந்த ஆண்டும் இதே நிலை நீடிக்கிறது. இந்த ஆண்டு மழைக்கால துவக் கத்திலேயே இப்பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் மழைக்காலம் இருப்பதால் கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர் மழை நீடித்தால் வயலில் பயிரிடப்பட்டுள்ள நாற்றுகள் அழுகிவிடும் நிலை உள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதி களிலிருந்து நீர் வடியா விட்டால், இளம் நாற்றுகள் அழுகிவிடும். மீண்டும் துவக்கத்தில் இருந்தே விவ சாயப் பணியை தொடர வேண்டிய நிலை ஏற்படும். எங்களுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்” என்றனர். ஆய்வுக்குச் சென்ற விவசாயிகள் சங்கத் தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர் மற்றும் வேளாண்துறை அலுவ லர்களிடம், பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
