tamilnadu

img

அடிப்படை வசதியின்றி தவிக்கும் புதுப்பட்டு கிராம மக்கள்

அடிப்படை வசதியின்றி தவிக்கும் புதுப்பட்டு கிராம மக்கள்

திருவண்ணாமலை, அக்.21- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 8,9 வார்டுகளில் தலித் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால்  மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். கால்வாய் வசதி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் செல்லும் அவலநிலை உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் மக்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டியும் திறக்காமல் இருப்பதால் அப்பகுதி பெண்கள் கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல், இரவு நேரத்தில் சாலையை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. மக்கள் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. தற்போது பருவ மழை துவங்கிய நிலையில் இன்னும் மோசமாகி விட்டது.  ஆலப்புத்தூர்- புதுப்பட்டு தலித் மக்களின் சுடுகாட்டு பாதை முட்புதர்களால் மூடப்பட்டு வழிப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. இந்த கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், செங்கம் வட்டார வளர்ச்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் செல்ல கால்வாய் வசதியும்,   தயாராக உள்ள கழிப்பிடத்தை திறந்து மக்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதோடு,  சுடுகாட்டு பாதை, சிமென்ட் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை   ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.