புதுச்சேரி மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற புதுச்சேரி அரசு மறுப்பு இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, அக்.22 பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பல்கலை கழக நிர்வாகத்தை கண்டித்து போராடிய வர்களில் 6 மாணவர்கள் உட்பட 24 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் அமைப்புகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி வழக்கை திரும்பப்பெற்று பாலியல் குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற உறுதிமொழிகளையும் அரசு நிறைவேற்றவில்லை. எனவே அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில், வியாழக்கிழமை (அக்.23) காலை 10:30 மணி அளவில் புதுச்சேரி பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை உறுப்பினர் வெ. வைத்தியலிங்கம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் அ.மு. சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை அமைப்பாளர் தேவ. பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி புருஷோத்தமன் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் திரளாக பங்கேற்கின்றனர்.