‘‘நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ முகாம் புதுகை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை, அக். 18- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ‘‘நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமினை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி ஆட்சியர் பேசுகையில், “இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு உயர் மருத்துவ சேவைகள் இம்முகாமில் வழங்கப்படுகிறது’’ என்றார். புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம்கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் பழனிராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப. புவனா, திருமயம் வட்டாட்சியர் ப. வரதராஜன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
