சாலையோரம் எல்லைக்கோட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தியதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: பொதுமக்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், சாலையோரம் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தும் வாகனங்களுக்கு காவல்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பேராவூரணி காவல்துறையினர், கடைகளுக்கு முன்பாக நெடுஞ்சாலை துறையினரால் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோட்டிற்கு வெளியே வாகனங்களின் பின்பகுதி சிறிது வெளியே நின்றாலும் அபராதம் விதித்து விட்டு சென்று விடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், பள்ளிவாசல் அருகில் உள்ள டீக்கடை முன்பாக, மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்பகுதி வெள்ளைக்கோட்டுக்கு வெளியே சிறிது இருந்தது. அங்கு வந்த காவலர் ஒருவர், கையில் வைத்திருந்த கருவியில் எல்லை தாண்டி நின்றதற்காக அபராதம் என பிரிண்ட் பேப்பரை கையில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். பேப்பரை வாங்கி பார்த்த அதிர்ச்சியடைந்தார். ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பல இடங்களில் அபராதம் விதிக்கப்படுவதால் கடைவீதிக்கு வாகனங்களில் வர, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், கடைவீதி வியாபாரிகள், பொதுமக்கள் வியாபாரம் இல்லை என புலம்புகின்றனர். நீலகண்ட பிள்ளையார் கோவிலில் முகூர்த்த தினங்களில், நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறும். திருமணத்திற்கு வாகனங்களில் வரும் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் சிக்கி கலைந்து போக பலமணி நேரங்கள்கூட ஆகியதுண்டு. அப்போதெல்லாம் எந்த காவல்துறையினரும் வந்து நெரிசலை ஒழுங்குபடுத்தியதில்லை. பொதுமக்கள் தாங்களாகவே பல ஆண்டுகளாக நெரிசலில் சிக்கி கலைந்து சென்று கொண்டிருக்கின்றனர். கூட்டமான நேரங்களில் கடைவீதியில், கோவிலில் நின்று போக்குவரத்தை சரிசெய்து, பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், இதுபோல திடீரென அதிரடியாக அபராதம் விதிப்பதால் காவல்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.