தந்தை பெரியார் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து, குடிநீர் வசதி செய்து தருக! இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப். 18- திருச்சிராப்பள்ளி மாவட்டம் காஜாமலை பகுதியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லை. மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்ட பின்னர், மாணவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை. தனியார் பேருந்துகளும் இந்தக் கல்லூரி பகுதியைச் சரியாக சென்றடைவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், கல்லூரியில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனைக் கண்டித்தும் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுதேசனா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜி. கே. மோகன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்த்தி, அன்பு ஆகியோர் உரையாற்றினர்.