சிபிஎம் உறுப்பினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, செப். 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான தாமரைச்செல்வனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன். இவர் செனையக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், இவரது பட்டா இடத்தில் ரோடு போட முயன்ற தனியார் முதலாளியை தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தனியார் முதலாளி சித்திரைச் செல்வன், அடி ஆட்களை வைத்து கொலை வெறியுடன் கடந்த ஆகஸ்ட் 24 அன்று தாக்கியுள்ளார். தாக்குதல் தொடுத்தவர்கள் மீது, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீரனூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.