இடி தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி மனு
திருவாரூர், அக்.15 - வயலில் விவசாயப் பணி ஈடுபட்ட போது இடி, மின்னல் தாக்கி காலமான விவசாயி கே.அன்பழகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரனிடம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் நேரில் மனு அளித்தார். அந்த மனுவில், “திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மருதவாஞ்சேரி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி தோழர் கே.அன்பழகன் சிறு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். கடந்த அக்.13 அன்று மாலை வயலில் விதை தெளிக்கும் போது, இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மறைந்த அன்பழகன் குடும்பத்திற்கு, பேரிடர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்க ஆவன செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாக.ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
