வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் நரிக்குறவ மக்கள்
நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
அறந்தாங்கி, ஆக. 26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ரெத்தினகோட்டை ஊராட்சி கூத்தாடிவயல் பகுதியில், இரு இடங்களில் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஒரு பகுதியில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளும், அதேபோல் 2001 இல், ஒரு பகுதியில் என 30 வருடங்களுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட 240-க்கும் மேற்பட்ட வீடு களின் சுற்றுச்சுவர் சேதம டைந்து மேற்கூரை இடிந்து, வசிப்பதற்கு முடியாத அளவு உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடு களை கட்டித் தரக்கோரி, நரிக்குறவ மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நரிக்குறவ மக்களுக்கு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சார்பாக, புதிய வீடு கட்டித் தருகிறோம் என்றும், மூன்று மாத காலத்திற்குள் உங்கள் வீடு கட்டித்தரப்படும் என்று கூறிய நிலையில் கூத்தாடிவயலில் இரண்டு இடங்களில் வசித்த சுமார் 240 வீடுகள் இடிக்கப்பட்டன. பின்னர், கம்பி கட்ட குழி தோண்டப்பட்டு இரண்டு மாதம் ஆகியும், இதுவரை எந்த வேலையும் நடைபெறவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்தும், துப்புரவுப் பணி செய்தும் பிழைத்து வரும் இந்த மக்கள், இருப்பதற்கு இடம் இல்லாமல் மரத்தடியிலும், வெட்ட வெளியிலும் குடியிருந்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையில் இருக்க இட மில்லாமல் பிளாஸ்டிக் சாக்குகளை பிடித்துக் கொண்டும், பக்கத்தில் இருக்கும் கடைகள் பக்கவாட்டிலும் ஓரமாக குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விரைந்து வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி இருந்த வீட்டையும் இழந்து, இரவு-பகலாக அவதியுற்று, தெருவில் சமைத்தும் உறங்குவதற்கு இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வரும் இப்பகுதி மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். கவி வர்மன், நகரச் செயலாளர் அலாவுதீன், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கர்ணா, சிபிஎம் நகரக் குழு உறுப்பினர்கள் கணேசன், இன்பா, மாதர் சங்க நிர்வாகிகள் லதா, இந்தி ராணி உள்ளிட்டோர், கட்டுவதற்கு குழி தோண்டப்பட்ட இடங்களை பார்வை யிட்டு, அப்பகுதி மக்களிடமும் விசாரித்தனர். அப்போது, அவதிப்பட்டு கொண்டிருக்கும் நரிக்குறவ மக்க ளுக்கு உடனடியாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதுவரை அரசாங்கத்தின் பொது இடத்தில் தங்கு வதற்கு அடிப்படை வசதி செய்தும், நிவா ரணம் வழங்கியும் அவர்களது இன்ன லைப் போக்க ஊராட்சி ஒன்றியமும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.