tamilnadu

img

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 670 ஐத் தாண்டும்

போர்ட் மோர்ஸ்பி,மே 26- பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 670 யை தாண்டும் என ஐ.நா இடம்பெயர்வு அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.  மோசமான காலநிலை மாற்றத்தால் பசிபிக் தீவு நாடான பாப்புவா நியூ கினியாவில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மே 24 அன்று யம்பலி என்ற கிராமத்தில் அதிகாலை மூன்று மணியளவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், சுகாதார நிலையம், சிறு வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கிட்டத்தட்ட 26 அடி வரை  மண்ணுக்குள் புதைந்துள்ளன.   முதலில் இந்த நிலச்சரிவில் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாகவும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்துள்ளனர் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், மண்ணில் புதைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 150 மற்றும் மண்ணில் புதைத்து பலியானவர்களின் எண்ணிக்கை 670 க்கும் அதிகமாக இருக்கும் என ஐ.நா இடம்பெயர்வு அமைப்பு தலைவர் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.   உயிர் பிழைத்துள்ள மக்கள் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 26 அடி வரை மண் மூடி இருந்தாலும் சிலர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்ததோடு, தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

நிலம் தொடர்ந்து சரிந்து வருவதோடு, தொடர் மழையால் வெள்ள நீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண்ணை அகற்றும் மிகப்பெரும் இயந்திரங்கள் இல்லாத சூழலில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளை அகற்றக்கூடிய  பெரிய இயந்திரங்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து  600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவும் அதனைக் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் இயந்திரம் வர காலதாமதம் ஆகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் உள்ளூர் மக்களுடன் இணைந்து குழிதோண்டும் விவசாயக் கருவிகள் மூலமும், சிறிய ரக புல்டோசர் மூலமும் மண்ணை தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருவதாக கூறப்பட்டுள்ளது.   எப்படியாயினும் தற்போதைய சூழலில் மக்களை உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை இப்போது குறைந்துவிட்டது என அக்டோப்ராக் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் ஏற்கனவே இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால் இந்த மீட்பு பணி மேலும் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, குடிநீர், மருந்துகளை கொண்டு செல்வதற்கு கூட காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமல்  செல்ல முடியவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

;