tamilnadu

img

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை தனியார் மயமாக்கக் கூடாது

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை தனியார் மயமாக்கக் கூடாது

வாலிபர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப். 15-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 18 ஆவது மாநாடு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடந்தது. மாநாட்டின் முதல் நாளான ஞாயிறன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  காட்டூரில் நடந்த கொடிப்பயண நிகழ்ச்சிக்கு பகுதி தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாநாட்டுக் கொடியை முன்னாள் மாவட்டத் தலைவர் ஜாகீர் எடுத்துக் கொடுக்க, அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை பெற்றுக் கொண்டார். கொடியை பகுதி செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் எடுத்து வந்தனர். திருச்சி மேற்குப் பகுதியில் நடந்த கொடிக்கம்பம் பயண நிகழ்ச்சிக்கு, பகுதி தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கொடிக்கம்பத்தை முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஹரிபாஸ்கர் எடுத்துக் கொடுக்க, அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபி பெற்றுக் கொண்டார். பகுதிச் செயலாளர் ஹாஜா நஜிபுகின் உள்ளிட்டோர் கொடிக்கம்பத்தை எடுத்து வந்தனர். பொன்மலையில் நடந்த பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கோபி தலைமை வகித்தார். ஜோதியை முன்னாள் மாவட்டப் பொருளாளர் விஜயேந்திரன் எடுத்துக் கொடுக்க, அதனை மாவட்டச் செயலாளர் சேதுபதி பெற்றுக் கொண்டார். பகுதிச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ஜோதியை எடுத்து வந்தனர்.  மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் எடத்தெரு அண்ணா சிலையில் இருந்து துவங்கிய பேரணி, கீழப்புதூர் அரசமரத்தடி அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடை அருகே நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவரும், சிபிஎம் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநில இணைச் செயலாளர்கள் பழனி, செல்வராஜ் மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக கங்கை கருங்குயில் கலை நிகழ்ச்சி நடந்தது. பாலக்கரை பகுதிச் செயலாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.  இரண்டாவது நாளான திங்களன்று, துரைசாமிபுரம் செல்லக்கண்ணு திருமண மண்டபத்தில் நடந்த பொது மாநாட்டிற்கு, மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றினார். இளம் பெண்கள் உப குழு துணை கன்வீனர் அபிராமி வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டக் குழு உறுப்பினர் சந்தோஷ் வாசித்தார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் துவக்க உரையாற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராஹிலா பானு வாழ்த்துரை வழங்கினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் சேதுபதி வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.  மாநாட்டில், பெல் பொதுத்துறை நிறுவனத்தின் புதிய பணி நியமனங்கள் மற்றும் தொழில் பழகுனர்கள் பணியிடங்களை கூடுதலாக்கி நியமனம் வழங்க வேண்டும்.  பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தனியார் மயத்தை திரும்பப் பெற வேண்டும். தினம், தினம் உயிர்ப்பலி வாங்கும் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக எம். அபிராமி, செயலாளராக ரெ. சேதுபதி, பொருளாளராக டி. சந்தோஷ் உள்பட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலத் தலைவர் கார்த்திக் நிறைவுரை ஆற்றினார். வரவேற்புக் குழு பொருளாளர் பாரதி சீனிவாசன் நன்றி கூறினார்.