பாஜகவின் ரத்தக் கறை படித்த கம்பளத்தில் பயணிக்கும் பழனிசாமி இரா. முத்தரசன் கடும் சாடல்'
சென்னை, ஜூலை 17 - “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின், கூட்டணிக்கான அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “2021 சட்டமன்றத் தேர்தலின்போது சிபிஐ முன்வைத்த அரசியல் முழக்கத்தை இரவல் வாங்கி, ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு முகவரி இல்லை என்றவர் இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார். சிபிஎம், விசிகவை தொடர்ந்து சிபிஐயும் அந்த அழைப்பை நிராகரிக்கிறது” என்றார். “எடப்பாடி நம்பகமான தலைவர் இல்லை. ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதாக கூறுகிறார். ஆனால் அவர் பாஜகவின் ரத்தக் கறை படித்த கம்பளத்தில் பயணிக்கிறார். அதன் ஆபத்துக்களையும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை உணர்ந்தும் பயணிக்கிறார். இந்த நிலையில் எங்களை அழைப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை” என்று கூறினார். “பாஜக நிர்பந்தப்படுத்தி அதிமுகவை அணியில் சேர்த்துள்ளது. எலியும் தவளையும் கூட்டணி வைத்தது போல் உள்ளது. பலவீன மாக உள்ளதால் தொண்டர்களை தக்க வைக்க ஏதேதோ பேசுகின்றனர். எந்தவொரு காலகட்டத்திலும் ஒரு கூட்டணி இத்தனை ஆண்டுகள் நீடித்தது இல்லை. திமுக தலைமையிலான அணி கொள்கை பூர்வமாக உருவான அணி. எனவேதான் இந்த அணி நீடிக்கிறது” என்று தெரிவித்தார்.