நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரத்தில் ஜனநாயக மீறல் மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்
புதுதில்லி, மார்ச் 10 - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் செவ்வாயன்று துவங்கியுள்ள நிலையில், இந்த விவாதத்தை நடத்துவதில் மோடி அரசு அப்பட்டமான ஜனநாயக மீறலில் ஈடுபட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக தமது சமூகவலைதள பக்கத்தில் கருத்துப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது: “சபாநாயகரின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தின்போது அவர் அவையை வழிநடத்தக் கூடாது. துணை சபாநாயகர்தான் அவையை நடத்த வேண்டும். ஆனால், பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக துணை சபாநாயகரைத் தேர்வு செய்யவில்லை. எனவே, இப்பொழுது அவையால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர்தான் அவையை வழிநடத்த வேண்டும். ஆனால், பாஜக அரசோ சபாநாயகரால் நியமிக்கப்பட்ட ஜெகதாம்பிகா பால் அவர்களைக் கொண்டு அவையை நடத்துகிறது. இது அப்பட்டமான ஜனநாயக மீறல். “சபாநாயகருக்கே அவையை நடத்த தார்மீக உரிமை இல்லாதபோது அவரால் நியமிக்கப்பட்டவருக்கு எந்த உரிமையும் இல்லை” என்ற எதிர்கட்சிகளின் குரலை மதிக்கும் ஜனநாயக மாண்போ, மரபுக்கான மரியாதையோ இல்லாத கட்சி பாஜக!.” இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
