articles

93 லட்சம் இந்தியர் வாழ்வாதாரத்திற்கும் நிதிநிலைக்கும் பேராபத்து சிஐடியு எச்சரிக்கை

 93 லட்சம் இந்தியர் வாழ்வாதாரத்திற்கும்  நிதிநிலைக்கும் பேராபத்து

சிஐடியு எச்சரிக்கை

புதுதில்லி, மார்ச் 10 -  ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல், வெறும் பிராந்திய மோதலாகச் சுருங்காமல் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மைக்கும், லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது குறித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தலைவர் சுதீப் தத்தா மற்றும் பொதுச்செயலாளர் எளமரம் கரீம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள அவசரக் கடிதங்களில், இந்தப் போர்ச் சூழல் இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாய் முதல் உள்நாட்டுத் தொழிலாளர் சந்தை வரை ஏற்படுத்தப்போகும் மீள முடியாத பாதிப்புகள் குறித்துத் தீவிரமான எச்சரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  

மாலுமிகளின் பாதுகாப்பும் முடங்கும் கடல்வழி வர்த்தகமும்

 பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து மார்ச் 1 முதல் முற்றிலும் முடங்கியுள்ளதால், இந்தியாவின் சர்வதேச வர்த்தகம் பெரும் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ‘எம்.டி ஸ்கைலைட்’ (MT Skylight) போன்ற எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் காயமடைந்துள்ளதும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதும் கடல்சார் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. போர்க்கால காப்பீடுகள் (War-risk insurance) மறுக்கப்படுவதால் கப்பல்கள் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது டன், மாலுமிகளுக்கு ஊதியம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதும் தடையாகி வருகிறது. பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட ஈரான் துறைமுகங்களில் தவிக்கும் நூற்றுக் கணக்கான இந்திய மாலுமிகளைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

 93 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் அந்நியச் செலாவணி வீழ்ச்சியும்  

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்து, பெருமளவிலான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்பி வரும் சுமார் 93 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் தற்போது மேற்கு ஆசியப் போர் முனையில் சிக்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் இவர்கள், போரின் காரணமாக வேலையிழப்பு, ஊதிய மறுப்பு மற்றும் முதலாளிகளால் கைவிடப்படும் சூழலைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாகக் கட்டுமானம், சுகாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில்  பணியாற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள், போர்ச் சூழலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அங்கிருந்து வரும் நிதி வரத்து (Remittances) தடைபடுவது நாட்டின் நிதி மேலாண்மையில் பெரும் நெருக்கடியை உருவாக்குவதுடன், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள இவர்களின் குடும்பங்களையும் வறுமையின் பிடிக்குள் தள்ளும் எனவும் சிஐடியு தலைவர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை மாற்றமும் பாதுகாப்பு அச்சுறுத்தலும்  

ஒன்றிய அரசு தனது பாரம்பரியமான நடுநிலைத் தன்மையைக் கைவிட்டு, யூத இனவெறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் நிலவும் நிச்சயமற்றத் தன்மையால் இந்தியத் தொழிலாளர்கள் ராணுவ நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள சிஐடியு, அவர்களைச் சிவிலியன்களாகப் பாதுகாப்பதை  உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. தூதரகங்கள் மூலம் 24 மணிநேர உதவி மையங்களை அமைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்குக் காப்பீடு மற்றும் இழப்பீடு வழங்குதல் மற்றும் போர் மண்டலங்களில் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல் போன்ற முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.