articles

img

தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? விளம்பரப் பித்தலாட்டமும் - உண்மை சரிபார்ப்பும்!

தமிழ்நாட்டு விவசாயிகளின்  உற்ற தோழனா மோடி அரசு? விளம்பரப் பித்தலாட்டமும் - உண்மை சரிபார்ப்பும்!

தமிழக மக்களின் உற்ற தோழர் என்று கூறிக்கொண்டு, ஒன்றிய பாஜக அரசு கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டு வருகிறது. மார்ச் 10 அன்று தமிழக விவசாயிகளின் “உற்ற தோழன்” என்று கூறி வெளியிட்டுள்ள விளம்பரம், உண்மையில் எண்களைக் கொண்டு ஆடப்படும் ஒரு மாயாஜாலம். இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள ஆறு ‘சாதனை’களையும் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தபோது, அவை தமிழக மக்களைத் திசைதிருப்பும் திட்டமிட்ட வஞ்சனை என்பது உறுதியாகிறது.

1 மீன்வளத் துறை: தேசிய பட்ஜெட்டைத் தமிழகப் பங்காகக் காட்டிய மெகா மோசடி

விளம்பரத்திலேயே மிகப்பெரிய பொய் இதுதான். ஒன்றிய அரசின் கூற்று: தமிழக மீன்வளத் துறை மேம்பாட்டிற்கு ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திட்டங்கள். உண்மை: ₹20,050 கோடி என்பது இந்தியா முழுமைக்குமான (PMMSY) ஐந்தாண்டு கால பட்ஜெட். ஒட்டுமொத்த நாட்டுக்குமான நிதியைத் தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கியதாகக் கூறுவது அப்பட்டமான பொய். உண்மையில் தமிழகத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட ஒன்றிய நிதி வெறும் ₹258 கோடி மட்டுமே! அதாவது, விளம்பரம் சொல்லும் தொகையில் வெறும் 1.3% மட்டுமே நிஜம்.

2 PM-KISAN: ஒரு நாளைக்கு வெறும் ₹16 - இதுவா கௌரவம்?

விளம்பரம்: 47 லட்சம் விவசாயிகளுக்கு ₹12,700 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.  உண்மை: இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ₹6,000 மட்டுமே கிடைக்கிறது. அதாவது மாதம் ₹500, ஒரு நாளைக்கு வெறும்  ₹16. இது ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MGNREGS) ஒருநாள் கூலியை விடக் குறைவு.  ஆனால், தமிழக அரசோ தனது வேளாண் பட்ஜெட்டில் மட்டும் ₹47,248 கோடி செலவிடு கிறது. இதில் இலவச மின்சாரத்திற்காக மட்டுமே ₹8,186 கோடி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3பயிர்க் காப்பீடு:  மாநில அரசின் பங்கைப்  பதுக்கும் தந்திரம்

விளம்பரம்: ₹15,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. உண்மை: 3.8 கோடி என்பது 17 பருவங்களில் திரட்டப்பட்ட மொத்த விண்ணப்ப எண்ணிக்கை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையில் மாநில அரசும் பெரும் பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் மாநில அரசு செலுத்தும் தொகையே அதிகமாக உள்ளது. தமிழக அரசு 2025-26 பட்ஜெட்டில் இதற்காக மட்டும் ₹841 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், விளம்பரம் மொத்தப் பெயரையும் தானே தட்டிச் செல்கிறது.

4வேளாண் உள்கட்டமைப்பு நிதி: கடனை ‘நிதி’ என்று காட்டும் ஏமாற்று

விளம்பரம்: சேமிப்பு மற்றும் சந்தை இணைப்பு வசதிகளுக்கு ₹6,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. உண்மை: இது அரசு வழங்கும் மானியம் அல்ல; மாறாக இது ஒரு வங்கிக் கடன் திட்டம். விவசாயிகள் வாங்கும் கடனுக்கு சிறு வட்டி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. வாங்கிய கடனை வட்டியுடன் விவசாயிகள் திருப்பிச் செலுத்த வேண்டும். வங்கிக் கடனை ‘அரசு தந்த நிதி’யாகச் சித்தரிப்பது வஞ்சகமான செயல்.

5மண் வள அட்டைகள்:  வருமானம்  இரட்டிப்பானதா?

விளம்பரம்: 1.5 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் விநியோகம். உண்மை: எண்ணிக்கை சரிதான். ஆனால், இதனால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது 2022 முதல் மற்றொரு திட்டத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது. வெறும் அட்டைகளை வழங்கிவிட்டு, விவசாயிகளின் வருமானம் உயர்ந்துவிட்டது என்று கூறுவது அப்பட்டமான மிகைப்படுத்தல்.

6நுண்ணீர் பாசனம்:  மாநில அரசின் சாதனைக்கு ஒட்டுப் போடும் செயல்

விளம்பரம்: 13 லட்சம் ஹெக்டேர் நிலம்  நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. உண்மை: இதில் ஒன்றிய அரசின் பங்கு சுமார் 8 லட்சம் ஹெக்டேர் மட்டுமே. மீதமுள்ள 5 லட்சம் ஹெக்டேர் தமிழக அரசின் சொந்தத் திட்டங்களால் உருவானது. குறிப்பாக, தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கி இச்சாத னையைப் புரிந்தது. மாநில அரசின் உழைப்பில் ஒன்றிய அரசு தனது முத்திரையைப் பதிப்பது முறையல்ல.

விளம்பரம் மறைக்கும் நிதி வஞ்சனை

தமிழகம் வழங்கும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், ஒன்றிய அரசு திருப்பித் தருவது வெறும்  29 பைசா மட்டுமே. அதே சமயம் உத்தரப்பிர தேசத்திற்கு ₹2.73-ம், பீகாருக்கு ₹7.06-ம் வழங்கப்படுகிறது. புயல் நிவாரணம்: மிக்சாங் புயலுக்கு தமிழகம் கோரிய ₹37,907 கோடியில் கிடைத்தது வெறும் ₹276 கோடி (0.7%) மட்டுமே. முடக்கப்பட்ட நிதி: கல்வி நிதி (சமக்ர சிக்சா) முதல் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட நிதி வரை ஆயிரக்கணக்கான கோடிகளை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தேசிய அளவிலான பட்ஜெட்டை மாநிலத்திற்கு மட்டும் செலவிட்டதாக காட்டுவது, வங்கிக் கடனைத் தானமாகச் சொல்வது, மாநில அரசின் திட்டங் களைத் தனது திட்டமாகப் படம் காட்டுவது என மோடி அரசின் விளம்பரம் முழுக்க முழுக்கப் புனைவு களால் ஆனது. தமிழகத்தின் வரிப்பணத்தைச் சுரண்டிவிட்டு, தர வேண்டிய நிதியை முடக்கி வைத்துக்கொண்டு, இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை வெளியிடுவது தமிழக விவசாயி களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய வஞ்சனை. - பட்டாசு