மயிலாடுதுறை மேம்பால சீரமைப்பு பணிகள் அமைச்சர் ஆய்வு
மயிலாடுதுறை, அக். 11- மயிலாடுதுறை மேம்பால சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை, காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு பாலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “மயிலாடுதுறையின் அடையாளமான சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்துள்ளது. உடனடியாக மராமத்து பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. 45 தினங்களுக்குள் புதுப்பொலிவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு இந்த ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்குக்கேற்ப இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதற்காக, தற்காலிக பாதை அமைத்துத் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்.15 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை ஒருவழிப் பாதையில் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார். இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் மணிசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
