tamilnadu

img

வஉசி நினைவாய் நெல்லையில் மாபெரும் ரத்ததான முகாம் - ஒற்றுமையே நமது பலம்

வஉசி நினைவாய் நெல்லையில் மாபெரும் ரத்ததான முகாம்  - ஒற்றுமையே நமது பலம்

திருநெல்வேலி, செப். 5 - “ஒற்றுமையே நமது நெல்லையின் பெருமை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு துளி ரத்தம் கூட பொருணை நதி பாயும் நமது மண்ணில் சிந்த அனுமதிக்க மாட்டோம்” என்ற உறுதியான சபதத்துடன் பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம் மக்கள் ஒற்றுமையின் அழகிய எடுத்துக்காட்டாக விளங்கியது.  செக்கிழுத்த செம்மல் விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மக்கள் ஒற்றுமை மேடை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்த ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சிறப்பு விருந்தினர்கள்  முகாமில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களில் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி வசந்தி மடோனா, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ்.ராமகுரு, மதிதா இந்து கல்லூரி முன்னாள் முதல்வரும் பேராசிரியருமான பொன்ராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் டாக்டர் கே.ஏ.மணிக்குமார், தூய யோவான் கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், பொருணை மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  ரத்ததான முகாம் அமைப்பு குழு தலைவர் டேனியல், ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் சைலேஷ் அருள்ராஜ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.  மருந்து விற்பனை பிரதிநிதிகள், எல்.ஐ.சி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், ஏ.டி.சி டயர் கம்பெனி ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என அனைத்துத் துறைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.  ஒற்றுமைக்கான செய்தி  நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள், “ஒற்றுமையாக இருந்த நெல்லையின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. சாதி, மதங்களைக் கடந்து பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துனணச் செயலாளர் செல்வராஜ் பேசுகையில், “ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் மூலம் நாம் பெற்ற சுதந்திரத்தையும் மக்கள் ஒற்றுமையையும் சாதிய அமைப்புகளும் மதவாத அமைப்புகளும் சீர்குலைக்க முயற்சிக்கின்றன. ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எத்தகைய தியாகம் செய்தும் அதைத் தடுப்போம்” என்று உறுதியளித்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுடலைராஜ், ஆர்.எஸ்.செண்பகம், பீர்முகம்மது ஷா, கே.மாரிசெல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கு.பழனி, எஸ்.கே.செந்தில், ஆர்.மதுபால், ஆர்.எஸ்.துரைராஜ், பி.எம்.முருகன், துரை.நாராயணன், ஆர்.முருகன், பி.என்.இசக்கிமுத்து, சாகுல் ஹமீது, எஸ்.வி.பாலசுப்பிரமணியன், சிபிஎம் நெல்லை மாமன்ற உறுப்பினர் முத்துசுப்பிரமணியன் (சிபிஎம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  “சாதி மதங்களைக் கடந்து மானுடராய் ஒன்றிணைவோம்” என்ற கொள்கையுடன் நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், நெல்லை மாவட்ட மக்களின் மானுட நேயத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் அருமையான நிகழ்வாக அமைந்தது. ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், தொடர் ரத்ததானத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ந.நி)