தஞ்சாவூரில் மராட்டா சங்க வெள்ளி விழா
தஞ்சாவூர், அக். 6- தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்நாடு மராட்டா சங்கத் தலைவர் வி.விஸ்வஜித் காடேராவ் தலைமை வகித்தார். இவ்விழாவை தொடங்கி வைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசும்போது, “மராத்தி மக்கள் வேறு, தஞ்சாவூர் வாழ் மக்கள் வேறு அல்லர். பல நூற்றாண்டுகளாகப் பெருமை சேர்க்கும் இந்த அரண்மனையை பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் நின்று பார்த்துச் செல்லும் நிலை இருந்தது. தற்போது சாதாரண ஏழை, எளிய பாமரனும் இந்த அரங்கத்தில் அமர்ந்து மகாராஜா விழாவையும், வெள்ளி விழாவையும் கொண்டாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள மத ஒற்றுமை மிகுந்த மாநிலம் தமிழ்நாடு’’ என்றார். பின்னர், மகாராஷ்டிர மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி அமைச்சர் உதய் சாமந்த் பேசுகையில், “தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்தால், மராட்டிய மக்களுக்காக மகாராஷ்டிர அரசு செலவில் மகாராஷ்டிர பவன் கட்டித் தரப்படும்’’ என்றார். முன்னதாக, கோவி. செழியனும், உதய் சாமந்தும் இணைந்து வெள்ளி விழா இலச்சினையை வெளியிட்டனர். விழாவில் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினர் சுகாஷ் பாபர், தமிழ்நாடு மராட்டா சங்கத்துக்கான மகாராஷ்டிர பிரதிநிதி கரண் சம்பாஜி ராவ், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் அரண்மனை இளவரசர்கள் டி.சிவாஜி ராஜா போன்ஸ்லே, சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
