tamilnadu

img

நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்க! டாஸ்மாக் ஊழியர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்க! டாஸ்மாக் ஊழியர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தல்

சென்னை, செப். 26 - நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 15 வது ஆண்டு பேரவை வெள்ளியன்று (செப்.26) கிண்டியில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், காலி பாட்டில்களை வாங்கும் நிர்வாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தற்காலிக பணி நீக்கம் மற்றும் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வழக்கை  விரைந்து முழுமையாக விசாரித்து உடனடியாக பணி வழங்க வேண்டும், பிஓஎஸ் இயந்திரத்தின் மூலம் ஸ்கேன் செய்து பாட்டில் வாங்கும் நடைமுறையை பணியாளர்கள் மீது திணிக்க கூடாது, எண்டு டு எண்டு ஸ்கேன் செய்து சரக்கு ஏற்றி இறக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு அலுவலகச் செயலாளர் எஸ்.வணங்காமுடி சிஐடியு கொடியை ஏற்றினார். சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.விஜயராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.துணைச் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர்  ஜி.செந்தில்குமார் பேரவையை தொடங்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் எஸ்.வடிவேலு வேலை அறிக்கையும், பொருளாளர் ப.பாக்கியராஜ் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் நிறைவுரையாற்றினார். துணைச் செயலாளர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார். நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக பா.பாலகிருஷ்ணன், செயலாளராக ப.பாக்கியராஜ், பொருளாளராக வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.