tamilnadu

img

சிபிஎம் கீழ்வேளூர் அலுவலகத்தில் காதலர்களுக்கு சாதி மறுப்பு திருமணம்

சிபிஎம் கீழ்வேளூர் அலுவலகத்தில் காதலர்களுக்கு சாதி மறுப்பு திருமணம்

நாகப்பட்டினம், ஜூலை 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியக் குழு அலுவலகத்தில் காதலர்களுக்கு சாதி மறுப்பு  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் வடக்காலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ப. மாதரசன், இருக்கை ஊராட்சி பெருந்தலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சியாமளாதேவி ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் தரப்பில் ஏற்றுக் கொள்ளவில்லை.  காதலர்கள், சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து திருமணம் செய்து வைக்க கோரியதை அடுத்து, சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் தலைமையில் மணமகன் வீட்டார் சம்மதத்தோடு எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  மணமக்கள் உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர் என்.சங்கரய்யா படத்தின் முன்பு நின்று மாலை மாற்றிக் கொண்டனர்.  சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன், எஸ்.துரைராஜ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.  மணமக்கள் தீக்கதிர் ஓராண்டு சந்தா பதிவு செய்து கொண்டனர். சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற 11 ஆவது சாதி மறுப்பு திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.