ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்ட குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
திருப்பத்தூர், ஜூலை 15 - காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளை ஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு தலா ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதி பதி மீனாகுமாரி உத்தரவிட்டு உள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். கர்ப்பமாக இருந்த மனைவியை கடந்த பிப்ரவரி 6 அன்று மருத்துவப் பரி சோதனைக்காக சித்தூர் மாவட்டத் துக்கு கணவர் ரயிலில் அனுப்பி வைத்தார். கோவையிலிருந்து திருப்பதி வரை செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலின் பொது பெட்டியில் அந்த கர்ப்பிணி பய ணம் செய்தார். குடியாத்தம்-கே.வி.குப்பம் இடையே ரயில் சென்றபோது கழிப்பறை அருகே அமர்ந்திருந்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (27) என்ற இளைஞர் அந்த பெண்ணை வழி மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதையடுத்து ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு வேறு பெட்டிக்கு தப்பித்தார். படுகாயம் அடைந்த நிலை யில், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை சக பயணிகள் பார்த்து உடனே ரயில்வே கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த னர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து வந்து பெண்ணை வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோத னையில் அவரது கை, கால் எலும்பு களில் முறிவு ஏற்பட்டுள்ளதும், 4 மாத சிசு உயிரிழந்ததும் தெரிய வந்தது. விசாரணையில் குற்றவாளி ஹேமராஜ் 2022இல் ரயிலில் பெண் பயணியின் செல்போன் பறித்த வழக்கிலும், 2024இல் சென்னை பெண் கொலை வழக் கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரிந்தது. இந்த வழக்கில் நீதிபதி மீனா குமாரி தீர்ப்பளிக்கையில், “ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்ட ஹேமராஜுக்கு 7 பிரிவுகளின்கீழ் ஆயுள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே சார்பில் ரூ.50 லட்சம், தமிழக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் என மொத்தம் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தர விட்டார்.