tamilnadu

img

ஏகாதிபத்திய சதிச் செயல்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம்!

ஏகாதிபத்திய சதிச் செயல்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம்!

சிபிஎம் நடத்திய பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

சென்னை, ஆக. 13 - “ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர் கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்” என்று பிடல் காஸ்ட்ரோ நூற்றா ண்டு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்தார். “தன்னில் பாதி செங்கொடித் தோழர்கள்!” என்றும்; “தன்னுடைய பெயரே, ஸ்டாலின்!” என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். கியூப ஒருமைப்பாட்டு விழா - பிடல்  காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா, செவ்வாய்க்கிழ மையன்று சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, பத்திரிகையாளர் என். ராம், இந்தியாவுக்கான கியூப தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது

எங்களில் பாதி செங்கொடி தோழர்கள்

கியூபா ஒருமைப்பாட்டுத் தேசியக் குழுவும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த முப்பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். செங்கொடித் தோழர் களான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

• சோசலிசக் கியூபாவைக் காப்போம்!

• ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்!

• பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டைக் கொண்டாடு

வோம்! என்று மூன்று முக்கியமான நோக்கங் களைக் கொண்டு, இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை தோழர் சண்முகம் அவர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார்! இந்த நிகழ்ச்சியில், நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தோழர் சண்முகம் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பா ளர்களும், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து கேட்டபோது, நான் உடனடியாக மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டேன்.  என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து, நான் வராமல் இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன்! 

தேர்தலுக்கான நட்பு இல்லை; கொள்கை நட்பு; இலட்சிய நட்பு

அண்மையில் எனக்கு சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டது உங்களுக்கெல்லாம் தெரியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று தான் தோழர்கள் என்னைச் சந்தித்து, இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க வந்தார்கள். அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான்  எனக்கு லேசான தலைச்சுற்றல் இருந்தது. இருந் தாலும், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு, “தோழர்களை எல்லாம் அறிவாலயம் வரச் சொல்லிவிட்டோம்; அவர்களைச் சந்தித்து விட்டுப் போகலாம்” என்று அறிவாலயத்துக்கு வந்து, சந்தித்து விட்டுத் தான் நான் மருத்துவ மனைக்குச் சென்றேன். இதை ஏன் நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நமக்குள் இருக்கின்ற தோழமை என் பது, தேர்தலுக்கான நட்பு இல்லை! அரசியல் லாப-நஷ்டங்களை பார்க்கின்ற நட்பு இல்லை! நமக்குள் இருப்பது, கொள்கை நட்பு! கோட் பாட்டு நட்பு! இலட்சிய நட்பு! இதுதான் பலருக்கும் கண்ணை உறுத்துகின்றது!

கலைஞர் கற்றுத் தந்தபடி  தினமும் தீக்கதிர் படிக்கிறேன்!

அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு, அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது. நாட்டில் யார், யார் எதை எதைப் பேசுவதென்றே இல்லை! என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்  டார்கள். அடிமைத்தனத்தைப் பற்றி பழனிசாமி அவர்கள் பேசலாமா? அவருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், இங்கே யாரும், யாருக்கும் அடிமையாக இல்லை. பழனிசாமி அவர்களே, நீங்கள் செய்தித்தாள் படிக்கிறீர்களா என்று  எல்லோருக்கும் டவுட் இருக்கிறது. இருந்தா லும், நிச்சயமாக ‘தீக்கதிர்’ படிக்கின்ற பழக்கம் உங்களுக்கு இருக்காது. இருந்திருந்தால், இப்படி பேச மாட்டீர்கள்! நான் நாள்தோறும் ‘தீக்கதிர்’ படிக்கிறேன். கலைஞர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். நம்முடைய தோழர்கள் டி.வி. டிபேட்டில் என்ன பேசுகிறார்கள் என்று நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம் பார்க்கிறேன். தோழர் சண்முகம் அவர்கள் - தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் - தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் - தோழர் கனகராஜ் அவர்கள் என்று எல்லோருடைய பேச்சுகளை யும் - விவாதங்களையும் - எழுத்துகளையும் நான் பார்க்கிறேன். அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உடன் பாடானது எது என்பதை எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்.

நட்புச் சுட்டல் எது, அவதூறு எது என பிரித்துப் பார்க்கத் தெரியும்! 

ட்டணி இருக்கிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டாமலும் இல்லை; அவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள் என்று நான் புறக்கணித்ததும் இல்லை! ஏனென்றால், எங்களில் பாதி கம்யூனிஸ்டுகள்! என்னுடைய பெயரே, ஸ்டாலின்! நட்பு சுட்டல் எது? உள்நோக்கத்தோடு பரப்பப் படும் அவதூறு எது? என்று எங்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும்! கொள்கைத் தெளிவும் - நட்பின் புரிதலும்  கொண்டவர்கள் நாங்கள் என்பதன் அடையாளம் தான் இந்த மேடை! கியூபாவில் புரட்சியை நடத்தி, ஆட்சியை நடத்திய மாபெரும் தலைவரான பிடல் காஸ்ட்ரோ அவர்களுடைய நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே போல, 2006-இல் கியூபா நாட்டின் பெருமையைப் போற்றக்கூடிய விழா ஒன்று சென்னையில் நடை பெற்றது. அதைத்தான் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள், பிடல்  காஸ்ட்ரோ அவர்களின் புகழைக் கவிதை யாக வாசித்தார். நம்முடைய தோழர் பாலகிருஷ் ணன் அவர்கள் கூட சுட்டிக்காட்டினார்.

காஸ்ட்ரோவின் மேஜையை அலங்கரித்த கலைஞரின் கவிதை

அந்த கவிதையில் இருந்து சில வரிகளை நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்… உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்; உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன். இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக்கனல்! இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்! இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும் இரட்டை வேட அரசியல் நடத்திய ‘பாடிஸ்டா’ எனும் பசுத்தோல் வேங்கை; அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர் அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது தான் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” எனும் வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில் வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்;     காஸ்ட்ரோ! பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு காலம் சிறை என்றதும் - பற்றி எரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு; ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா! ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் - அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ! நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் - மக்கள் நலம் பெருக்கும் சாதனைகள் பலவும் இல்வாழ்வையும் துறந்து இலட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின் புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய் புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டே இருக்கின்றன. வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்த போது - பல நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் முப்பத்திரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா - அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு அணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த போது; அது தான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்று - மக்களைத் திரட்டினார் பிடல் காஸ்ட்ரோ - மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்; பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் - அவரைப் பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்; பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் அடையாளம்!

- இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை! இந்த கவிதையை மொழிபெயர்த்து, பிடல் காஸ்ட்ரோ அவர்களிடம் தரப்பட்டு, அதை தன்னுடைய மேசை மீது வைத்திருந்தார் என்று தலைவர் சொல்வார்.

உலகத் தலைவரான காஸ்ட்ரோவின் நூற்றாண்டில் பங்கேற்பது மகிழ்ச்சி

அப்படிப்பட்ட உலகத் தலைவரான பிடல் காஸ்ட்ரோ அவர்களுடைய நூற்றாண்டு விழா வில் பங்கேற்பதில் எனக்குக் கிடைத்த மிகப் பெருமையாக உள்ளது! உலகின் பல நாடுகளில் புரட்சி நடந்திருக் கிறது; அனைத்து புரட்சிகளும் வெற்றி பெற்ற தில்லை. சில புரட்சிகள்தான் வென்றுள்ளன! சில புரட்சியாளர்கள் தான் ஆட்சி அமைத்துள்ளனர்! அப்படி, ஒரு புரட்சி நடந்து, அந்தப் புரட்சி வெற்றி பெற்று - புரட்சியைத் தொடங்கியவரே ஆட்சியில் அமர்ந்து - வெற்றிகரமாக பல்லாண்டு காலம் ஆட்சியும் அமைத்து - அதே பேரையும், புகழையும் நூற்றாண்டு காலம் தக்க வைத்திருக்கிறார் என்றால், அது பிடல் காஸ்ட்ரோ அவர்கள்தான்! 17 ஆண்டு காலம் கியூபாவின் பிரதமர் - 32  ஆண்டு காலம் கியூபாவின் ஜனாதிபதி என, அமெரிக்க நாடு விதித்த பொருளாதாரத் தடை களையும் வென்று கியூபா நாட்டை வளர்த்துக் காட்டினார் பிடல் காஸ்ட்ரோ!  “என்னை நீங்கள் கைது செய்யலாம், அது எனக்குப் பொருட்டல்ல, வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று நீதிமன்றத்தில் சொன்ன பிடல் காஸ்ட்ரோ அவர்களை, வரலாறு விடுதலை மட்டும் செய்யவில்லை; உலகையே கொண்டாட வைத்திருக்கிறது!

சோசலிசக் கியூபாவைக்காப்போம்!  ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்!

பிடல் காஸ்ட்ரோவும் - சே குவேராவும்தான், உலகில் அனைத்து புரட்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக, நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழுகிறார்கள்! மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் இருந்தது அறிவு நட்பு! பிடலுக்கும், சேகுவேராவுக்கும் இருந்தது புரட்சி நட்பு! ஒரே கொள்கையைத் தாங்கிய இரு போரா ளிகள் அவர்கள். உலகின் பல கொள்கைவாதி களுக்கும், புரட்சியாளர்களுக்கும் இன்றும் அவர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள். பிடல் காஸ்ட்ரோவின் வரலாறும், முழக்கங்களும் இப்போது உலகம் முழுக்கத் தேவையாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், சோசலிசக் கியூபாவைக் காப்போம்! ஏகாதிபத்திய சதிகளை முறி யடிப்போம்!! - என்று முழக்கமாக முன் வைத்திருக்கிறீர்கள். உலகம் முழுவதும் நடைபெறும் ஏகாதி பத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய நெருக்கடி இப்போது இருக்கிறது.  ஏகாதிபத்திய சதிகள் என்பது, ஏதோ போர் தொடுப்பதால் மட்டும் ஏற்படுவது இல்லை; இந்தியாவுக்கு 50 விழுக்காடு வரியை அமெரிக்கா பிறப்பித்துள்ளதும் இதேபோன்ற சதிதான். இதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இது குறித்து வெளிப்படையான பதிலை ஒன்றிய பாஜக அரசும், பிரதமர் மோடி அவர்களும் பதிவு செய்தாக வேண்டும்.

பலவீனத்தின் அடையாளமாக காட்சியளிக்கும் பிரதமர் மோடி

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து, ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், எதற்காக அமெ ரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தன்னிச்சையாக வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும்? இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் பிரதமர் மோடி பதிலே சொல்லவில்லை. இது அவருடைய பலவீனத்தின் அடையாளம்! ஆனால், கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பிடல் காஸ்ட்ரோ, பலத்தின் அடையாள மாக இருந்தார். அந்த நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்தார். அந்த நாட்டு மக்களுக்கு காவல் அரணாக இருந்தார். அதனால், உலகத் தலைவர்களின் அடையாளமாக இருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நூற்றாண்டு விழாவில், அவர் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க!  என்று வாழ்த்தி, ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமை யுடன், இதே தோழமையுடன் எந்நாளும் இருப்போம் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.