tamilnadu

img

கஞ்சராஜாவின் கணக்கு - உதயசங்கர்

கஞ்சநாட்டு ராஜா கஞ்சப்பிரபு மகாக்கஞ்சன். யாருக்கும் ஒரு பைசா கூடக் கொடுக்க மனம் வராது. அது வும் மக்களுக்குக் கொடுக்கவேண்டுமென் றால் அவ்வளவுதான். ஏதாவது காரணம் சொல்லி ஏமாற்றுவான். அப்படியே கஜானா வில் பணமே இல்லாதமாதிரி கண்ணீர் வடிப்பான். சிலநேரம் மக்கள் முன்னால் பிச்சைக்காரவேடம் போட்டு தான் பிச்சை எடுத்துத்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று புலம்புவான். இப்படி நடித்து நடித்து அதிக வரிவசூலையும் செய்து விடுவான். மக்கள் பாவம். என்ன செய்ய முடியும்? கஞ்சப்பிரபு சொல்வதை உண்மை என்று நம்பினார்கள்.  ஆனால் ராஜா கஞ்சப்பிரபு தன்னுடைய படுக்கையறையை கஜானாவுக்கு அருகி லேயே கட்டி வைத்துக் கொண்டான். எப் போதும் கஜானாவிலிருக்கும் பணத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கஞ்சப்பிரபுவின் கஞ்சத்தனத்தினால் தொழிலாளிகளுக்கு சம்பளம் போட வில்லை. விவசாயிகளுக்கு அவர்களு டைய விளைபொருட்களுக்கு விலை  கொடுக்கவில்லை.

நாட்டில் பணப்புழக்கம் இல்லை. மக்கள் வறுமையில் தள்ளப்பட் டார்கள். தினசரி சாப்பாட்டுக்கே வழியில்லா மல் இருந்தது. ஆனால் மந்திரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், சம்பளம் கிடைத்தது. பணக்காரர்கள் பொருட் களைப் பதுக்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். மக்கள் தெருவுக்கு வந்து போராடி னார்கள். ஒன்றும் நடக்கவில்லை. தொழிலாளிகள் போராடினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. விவசாயிகள் போராடினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இளைஞர்கள் போராடினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக அந்த நாட்டில் இருந்த ஆயிரம் துப்புரவுத்தொழிலாளர்கள் போராடினார்கள்.  அரண்மனை நாறிவிட்டது.      நகரம் நாறிவிட்டது.  ஊர் நாறிவிட்டது.  கிராமம் நாறிவிட்டது.

 கஞ்சப்பிரபுவால் சகித்துக்கொள்ள  முடியவில்லை. துப்புரவுத்தொழிலாளர் களை அழைத்தார்.  “நீங்கள் செய்யும் துப்புரவுத்தொழில் கடவுளுக்குச் செய்யும் சேவை.. உங்கள் வாழ்வில் நீங்கள் சேர்க்கும் புண்ணியம்.. இறந்த பிறகு சொர்க்கத்துக்குப் போவீர் கள்.. அடுத்த பிறவியில் உயர்ந்த சாதியில் பிறப்பீர்கள்…..உங்கள் கால்களைக் கூட கழுவுகிறேன்.. போய் உங்கள் வேலை களைப் பாருங்கள்..” என்று கண்ணில் நீர்  வழியச் சொன்னார். அதைக்கேட்ட துப்புர வுத்தொழிலாளர்கள் மனம் இளகினர். ஆனால் சங்கத்தின் தலைவராக இருந்த வேலன், “ஆமாம் ராஜா நாங்கள் செய்யும் தொழில் புனிதமானது என்று எங்களுக்குத் தெரியும்.. ஆனால் வயிறு என்று ஒன்று இருந்து கொண்டு சதா கூப்பாடு பொடுகிறதே.. என்ன செய்ய? பெரிதாக ஒன்றும் வேண்டாம்.. ஒரு பைசா சம்பளம்  கொடுங்கள்.. ஒவ்வொரு நாளும் அதை இரண்டின் மடங்காக்கிக் கொடுங்கள்.. அது போதும்.. “ என்று பணிவுடன் கேட்டான். கஞ்சப் பிரபுவுக்கு முதலில் சிரிப்பு வந்தது. ஒரு பைசா கேட்கிறானே இந்தப்பயல் என்று நினைத்துக் கொண்டு மந்திரிகளைப் பார்த்தார். மந்திரிகளும் வேலன் சொன்ன தைக்கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டி ருந்தனர். உடனே ராஜா கஞ்சப்பிரபு, “சரி வேலா! அப்படியே ஆகட்டும்..

ஏய்.. யாரங்கே? துப்புரவுத்தொழிலாளர் களுக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். முதல்நாள் ஒருபைசா.. இரண்டாவது நாள் இரண்டு பைசா.. மூன்றாவது நாள் நான்கு பைசா.. ஐந்தாவது நாள் எட்டு பைசா.. என்ன சரிதானே.. வேலா..” என்று சொல்லியபடி ஏளனமாகச் சிரித்தார்.

வேலனும் அவனுடைய தோழர்களும் சிரித்துக் கொண்டே ஒரு பைசா சம்பளம் வாங்கிக் கொண்டு போனார்கள்.  இருபது நாட்கள் வரை எந்தப்பிரச்னையு மில்லாமல் கடந்தன. ஆனால் அதற்குப் பின்னால் தான் ராஜா கஞ்சப்பிரபுவுக்கு நிலைமை புரிந்தது. அவர் வேலனையும் அவனுடைய தோழர்களையும் அழைத்து  “வேலா.. என்னிடம் அவ்வளவு பண மில்லை.. தயவு செய்து.. இந்த உடன்படிக் கையைத் திரும்பப்பெற்றுக்கொள்..” என்று மன்றாடினார். வேலன், “ராஜாவே நாங்கள் கஞ்சர்களும் இல்லை..

பேராசையும் எங்களுக்கு இல்லை.. நாட்டில் உள்ள அனைவருக்கும் முறையாகச் சம்பளம் போடுவதற்கு நீங்கள் சம்மதித்தால் நாங்கள் இந்த உடன்படிக்கையை திரும்பப்பெற்றுக் கொள்கிறோம்..” என்றான். “அப்படியே அப்படியே செய்கிறேன்..வேலா..” என்றான் ராஜா கஞ்சப்பிரபு. ஏன் ராஜா கஞ்சப்பிரபு பயந்து போனான்  தெரியுமா? வேலன் சொன்ன உடன்படிக் கைப்படி துப்புரவுத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுத்தால் ஒருமாதம் முடிவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டியதிருக்கும்? கணக்கிட்டுப்பாருங்கள். ஒவ்வொருவருக்கும்  53 லட்சத்து 68 ஆயிரத்து 709 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள்.