tamilnadu

உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல!

உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல!

வெடித்துச் சிதறும்  பட்டாசுகளின் ஒலிச் சத்தத்தில் கந்தக அறையில்   வியர்த்து உருவாக்கிய விரல்களின் வாழ்வின் மீதான நம்பிக்கையும் இருக்கிறது!  அணிந்து மகிழும்  ஆடைகளின் அழகியலில்  அதிர்ந்த ஒலியில்  கண்கள் பூக்க கால்கள் நோக உருவாக்கிய  உழைப்பாளிகளின்  எதிர்காலமும் இருக்கிறது!  பலதூரம் பயணித்து பாசத்தோடு உடனமர்ந்து  பலகாரம் சாப்பிடும்போது கிடைக்கின்ற பாசத்தில்  கால நேரம் கருதாமல்  கை கால்கள் சோர்ந்து போக கொண்டு வந்து சேர்த்திட்ட போக்குவரத்து சொந்தங்களின் குடும்ப வாழ்வின் தியாகமும் கொஞ்சம் கலந்திருக்கிறது!   சின்னஞ்சிறு திரி போட்டு சிறு குளி அகல்விளக்கில்  சிங்காரமாய் எண்ணெய் ஊற்றி சீராக அடுக்கி வைத்து  ஏற்றுகின்ற ஒளி வெளிச்சம் மேலாடை அணியா தொழிலாளர்களின்  ஏக்கம் நிறைந்த வாழ்க்கையையும் கலந்து தான் பிரகாசிக்கிறது!   ஆக நீங்கள் பங்கெடுத்து மகிழும்  பண்டிகைக்கால  மகிழ்ச்சிகள் எல்லாம்  உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல  உணருங்கள்  உலக மக்கள் யாவரும் உரிமைகளோடு வாழ்ந்திடவே உள்ளம் விரும்பி கொண்டாடுங்கள்!... தீபாவளி சிறக்கட்டும்!  - பாப்பாக்குடி  இரா.செல்வமணி