tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

தரமான சான்று பெற்ற நெல்விதைகளை  பயன்படுத்த அறிவுறுத்தல்

பாபநாசம், ஆக. 9-  தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்று விடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  டெல்டா மாவட்ட சாகுபடிக்கு என வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விரும்பும் சாவித்ரி, ஆடுதுறை 51 போன்ற ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  விவசாயிகள், தாங்கள் வாங்கிய விதை நெல்லிற்கான ரசீது, மூட்டையில் உள்ள விபர அட்டை ஆகியவற்றை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.  மேலும், தாங்கள் வாங்கிய விதை நெல்லில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்து அடுத்த நாள் அதன் முளைப்பு திறனை தாங்களே அறிந்து கொண்டும், பின்னர் நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.  இதன் மூலம் விதை தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்த்து விடலாம். தற்போது அனைத்து வட்டாரங்களிலும் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகளை சேகரித்து விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்து வருகிறார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் இந்த பருவத்துக்கு உகந்த, தரமான சான்று பெற்ற நெல் விதைகளை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் சிறைத்துறை அதிகாரி உள்பட  23 பேர் மீது வழக்கு பதிவு  7 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக. 10-  திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர், மதுரையைச் சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன், கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கடந்த மாதம் ஹரிஹரசுதனை சிறை துணை அலுவலர்(துணை ஜெயிலர்) உள்ளிட்டோர் தாக்கி உள்ளனர். அதனை தொடர்ந்து ஹரிஹரசுதனை சந்திக்க வந்த அவருடைய பெற்றோருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஹரிஹரசுதனின் தாய், இது குறித்து ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.  அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், சிறை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.  அதன்படி ஹரிஹரசுதனை தாக்கியதாக திருச்சி மத்திய சிறை, துணை சிறை அலுவலர் மணிகண்டன், தலைமை காவலர் அருண்குமார், பெயர் தெரியாத ஒருவர் மற்றும் 20 சிறை காவலர்கள் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இச்சம்பவம குறித்து கே.கே.நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்