வகுப்புகளுக்கு வந்தும் வருகைப் பதிவு மறுப்பு: வணிகவியல் துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் புகார்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 31- இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சூர்யா தலைமையில் கல்லூரி கல்வி நிலை இயக்குனரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ளது தந்தை பெரியார் அரசு மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி. இந்த கல்லூரியில் சுமார் 6000 மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயர் கல்வியை படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் பேராசிரியர்கள், மாணவர்கள், வகுப்பிற்கு வருகை தந்த போதிலும், மாணவர்கள் வகுப்பிற்கு வராதது போல் குறிப்பிடும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வணிகவியல் துறையில் இது போன்ற முறையற்ற செயல்களில் பேராசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வினை எதிர்கொள்ளும் போது வருகை பதிவேட்டின் குறைவின் காரணமாக அபராதம் செலுத்தும் நிலை உருவாகும். இதுபோன்ற ஒழுங்கற்ற செயலில் செயல்படும் பேராசிரியர்களை கேள்வி கேட்கும் மாணவர்களை, மரியாதை குறைவாக பேசவும், திட்டவும் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் தங்களது வகுப்பறைகளை தாங்களே தினந்தோறும் பெருக்கி சுத்தம் செய்யும் அவலமும் கல்லூரியில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் குடிநீர் வசதி, போதுமான கழிவறை வசதி 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கக் கூடிய இடத்தில் மாணவிகளுக்கு நாப்கின் வழக்கப்படுவதும் இல்லை. முறையாக நாப்கின் எரியூட்டும் கருவியும் இல்லாமல் பெரும் சிரமத்தில் உள்ளனர். எனவே, கல்லூரி கல்வி இணை இயக்குனர் உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.