மகளிர் செஸ் உலகக்கோப்பை இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன்
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் கோனேரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் பலப்பரீட்சை நடத்தினர். இரு இந்திய வீராங்கனைகளும் சனிக்கிழமை மோதிய முதல் சுற்று டிரா ஆனது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது சுற்றும் டிராவில் முடிவடைந்தது. 34 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்து கொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில்,சாம்பியனை தீர்மானிக்க டை-பிரேக்கர் சுற்று திங்களன்று நடைபெற்றது. வெள்ளைக் காய்களுடன் களமிறங்கிய கோனேரு ஹம்பிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நொடியில் எல்லாம் தலைகீழாக மாறியது. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், கோனேரு ஹம்பி செய்த ஒரு சிறிய தவறான நகர்வு, போட்டியின் ஒட்டுமொத்த போக்கையும் திவ்யாவிற்குச் சாதகமாக மாற்றியது. ஹம்பியின் இந்த ஒரு நிமிடத் தவறை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட திவ்யா, ஆட்டத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தினார். இந்த எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ஹம்பி யால், அதிலிருந்து மீள முடியவில்லை. திவ்யாவின் அபாரமான ஆட்டத்திற்கு முன் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த கோனேரு ஹம்பி, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்தில் இருந்து விலகினார். இதன்மூலம், இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் மகளிர் உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திரச் சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம், திவ்யா உலகக்கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தையும் பெற்றுள்ளார். வெறும் 19 வயதில் உலக ஜூனியர் சாம்பியன் மற்றும் தற்போது உலகக்கோப்பை சாம்பி யன் என இரட்டை மகுடம் சூடி, இந்திய செஸ்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை திவ்யா நிரூபித்துள் ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.