tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! ஜாக்டோ-ஜியோ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! ஜாக்டோ-ஜியோ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப். 9-  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில், பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். அரசாணை 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் சிறப்புஆசிரியர்கள், அரசு தொழில்பயிற்சி நிலைய ஊழியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான செங்குட்டுவன், முருகானந்தம், உமாநாத் மற்றும் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், பிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்  திருச்சிராப்பள்ளி ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்டு இயக்கமான ஜாக்டோ-ஜியோ சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திங்களன்று கோரிக்கை விளக்க பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, நீலகண்டன் நவநீதன், உதுமான் அலி மற்றும் குமாரவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீதன் வரவேற்புரையாற்றினார்.   தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மற்றும் அரசு கல்லூரி பேராசிரியர், கழக மாநிலத் தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் கோரிக்கை சாசனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர், உயர் மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். ஆசிரியர் சங்க நிர்வாகி குமாரகுரு நன்றி கூறினார்.  கரூர் ஜாக்டோ - ஜியோ கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, பொன்.ஜெயராம் ஆகியோர் தலைமை வகித்தனர்‌. ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான, தமிழ்நாடு மருத்துவத் துறை ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாநில தலைவருமான மு.செல்வராணி சிறப்புரையாற்றினார்.  கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையீட்டு மனுக்களை வழங்கினர்.