தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை இருளில் மூழ்கிய நீலகிரி
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை தருமபுரி, அக். 23- தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, புதனன்று பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கினர். தொடர் மழையின் காரணமாக மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், இலக்கியம்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் முன் இருந்த மரம் மழையினால் முறிந்து விழுந்தது. இந்த மழையால் தருமபுரி நகரப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படும் நிலையில், புறவழிச்சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. மேலும், புதனன்று மாலை நேரத்தில் பலத்த மழை பெய்ததால், பள்ளி மாணவர்கள் வீடு திரும்புகையில் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து வியாழனன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவிட்டார். இதேபோன்று அரூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேலம் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையானது, மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 4 ஆவது நாளாக (வியாழனன்று) முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 12,700 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், ஏற்காடு மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மலைப்பாதையில் பயணிக்க வெள்ளியன்று வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்திலேயே போக்குவரத்து காவலர்கள் திருப்பி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் – ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும், குன்னூர் அருகே ஆப்பிள் பி பகுதியில் உள்ள பிரவீன்குமார் என்பவரின் குடியிருப்புப் பகுதியில் பாறை உருண்டு விழுந்ததில் அவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து சேதமடைந்தது. இதேபோல குன்னூர் - ஆடர்லி நெடுஞ்சாலையில் மேல் கரன்சி பகுதியில் சாலையோரத்தில் பாறை உருண்டு விழுந்தது. மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறை மற்றும் மண்ணை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, வடகிழக்கு பருவமழையால் கோத்திகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குஞ்சப்பணை ஊராட்சி, அரியூர் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற, ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
