இலவச கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், ஆக. 21- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திருவாலம் பொழில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கராஜ், கண்ணில் புரை முற்றிய நிலையில் இருந்த 10 பேரை, கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கண்ணில் லென்ஸ் பொருத்தி, பார்வையளிக்க தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதே போன்று கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெகன் தலைமை வசித்தார். கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கநாயகி கண் புரை முற்றிய நிலையில் இருந்த 7 பேரை, கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார்.
சாலை விபத்தில் மாணவன் பலி
அறந்தாங்கி, ஆக. 21- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையில் பெருநாவலூரில், அரசுக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில், அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த சுரேஷ் பாபு(17), கடையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(18), குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் (18) ஆகிய மூவரும் பி.எஸ்.சி கணினி அறிவியல் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மூவரும் வியாழனன்று தேர்வு முடித்துவிட்டு, கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி வரும்போது, நானாக்குடி முக்கம் வளைவு அருகில் எதிரே வந்த பிக் அப் வேன் மோதி, சம்பவ இடத்திலேயே எழில் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு இறந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ், சௌந்தர்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.