tamilnadu

img

வீட்டுமனை கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனுத் தாக்கல்

வீட்டுமனை கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனுத் தாக்கல்

மன்னார்குடி, ஜூலை 14-  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் கிராமத்தில் வசித்து வரும் 66 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி, மன்னார்குடி கோட்டாட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளிக்கப்பட்டது.  நீண்ட காலமாக இக்குடும்பங்கள் பட்டா இல்லாமல் சிறிய குடியிருப்புகளில் போதிய வசதியின்றி, ஒரு குடியிருப்பில் 7, 8 பேர் நெருக்கடியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ், நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்களை அணிதிரட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  திருவாரூர் தேவங்குடி - மன்னார்குடி - முக்கூட்டு சாலையில், சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து, வருவாய் நிர்வாகம் 18 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா அளிக்க முன்வந்தனர். ஆனால், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர்கள்   அனைவருக்கும், குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 18 குடும்பங்களுக்கான பட்டாக்களை மட்டும் பெற, அந்த மக்கள் மறுத்து விட்டனர். தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம் தான் சாத்தியமாகும் என்பதை உணர்ந்த, 60-க்கும் மேற்பட்ட வாஞ்சியூர் கிராம குடும்பத்தின் மக்கள் 12.6.2025 அன்று மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் முன்னிலையில் தங்களை கட்சியோடு இணைத்துக் கொண்டனர்.  பின்னர், நடைபெற்ற பட்டா கோரும் விண்ணப்பங்கள் சேகரிப்பு இயக்கமும்,  கட்சியில் இணையும் விழாவும் வாஞ்சியூர் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 66 குடும்பங்களுக்கான வீட்டுமனை பட்டா கோரும்  விண்ணப்பங்களை, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜனிடமும் மாவட்ட செயலாளர் டி. முருகையனிடமும் அளித்தனர்.  இதன் பின்னணியில் சேகரிக்கப்பட்ட 66 வீட்டுமனை பட்டா கோரும்  விண்ணப்பங்களை, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் திங்கட்கிழமை மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர்  ஆர்.யோகேஸ்வரனிடம் அளித்தார்.  விரைவில் வீட்டு மனைப் பட்டா அளித்திடவும், பின்னர், அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்க ஆவன செய்திடவும் கேட்டுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் ஜி. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.