நூறு ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகள் அடக்குமுறை - ஆனாலும் அசையாத கம்பீரம்!
கம்யூனிஸ்டுகள் வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் தடம் புரளவில்லை!
மன்னார்குடி, ஆக.12- “கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதில் சரிபாதி, காலம், சிகப்புத் துணி அணிந்து எங்கும் நடமாட முடியாத கடுமையான அடக்கு முறைகள் - இவை அனைத்தையும் கடந்து தான் நமது கம்யூனிஸ்ட் இயக்கம் கம்பீரத்து டன் இன்று வலம் வருகிறது. கம்யூனிஸ்டு கள் வரலாற்றின் எந்தக்கட்டத்திலும் தடம் புரண்டதே இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பெருமிதமாகப் பேசினார். எண்பதாவது வயதில் எஸ்.தங்கராசுவுக்கு கௌரவம் கட்சியின் திருவாரூர் மாவட்ட மூத்த தலைவர் இருள்நீக்கி எஸ்.தங்கராசு அவர்களின் எண்பதாவது வயது கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா இருள்நீக்கியில் நடைபெற்றது. கட்சியின் கோட்டூர் ஒன்றிய குழு மற்றும் ஊராட்சியின் சார்பாக நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். விழாவில் பி.சுப்பிரமணியன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் விழா முன்னுரையாற்றினார். திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரி முத்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், காவேரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் பானு ஞானவேல், விசிக தலைவர் டி.முருகையன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் எம்.செந்தில்நாதன், மதிமுக செயலாளர் சிவ.சந்திரன், அமுமுக தி.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்கள். “ஓலைக் குடிசையில் வாழும் சட்டமன்ற உறுப்பினர் - கம்யூனிஸ்ட் எளிமையின் சின்னம்” கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து பேசுகை யில், “திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் தோழர் கே.மாரிமுத்து அவர் குடும்பம் பழைய நிலையிலிருந்து இன்றளவும் மாறாமல் ஓலைக் குடிசை வீட்டிலேயே வாழ்ந்து வரும் செய்திகளைப் படத்தோடு பத்திரிகைகளில் பார்க்கும்போது எங்களுக்கெல்லாம் பெருமை யாக இருக்கும். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரையின் மனைவி இன்றளவும்கூட 100 நாள் வேலைக்குச் செல்வ தைப் பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார். 65 ஆண்டுகள் கட்சி வாழ்வு - சாதாரண காரியமல்ல “தோழர் எஸ்.தங்கராசு 80 வயதை அடைந்துள்ளார். கட்சியில் அவரது வாழ்க்கை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள். 65 ஆண்டுகள் ஒரு கட்சியில் நீடித்திருப்பதும், கம்யூனிஸ்டுகள் மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்து வாழ்வதும் சாதாரண காரியமல்ல,” என்று பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். முழுநேர ஊழியர்களின் தியாக வாழ்க்கை “கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக வாழ்க்கையில் பாதிக்கு மேல் செலவிடும் நிலையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது, நல்ல வாழ்க்கையை அவர் களுக்கு அமைத்துக் கொடுக்க முடியாது, சரி யான மருத்துவம் செய்து கொள்ள முடியாது. அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் வேதனை சோதனைகளை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை,” என்ற அவரது கண்கள் பனித்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவமான அமைப்பு “கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு, அதன் கட்டுமானம் வித்தியாசமானது. யாரும் கட்சியில் தனிப்பட்ட தலைவராக வளர்ந்து உயர்வதில்லை. அவரை அப்பழுக்கற்ற தலைவராக வளர்க்கிற பணியைக் கட்சி அவரது வாழ்நாள் முழுவதும் செய்கிறது,” என்று விளக்கினார். “சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?” - மாவோவின் போதனை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்ற புத்தகம் ‘சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?’ சீனாவில் மாபெரும் தலைவர் தோழர் மா சே துங்கின் அடுத்த நிலைத் தலைவரான லியூ ஷோ சி கட்சி ஊழியர்கள் மத்தியில் ஆற்றிய உரையே என்று குறிப்பிட்ட பாலகிருஷ்ணன், “சொந்த நலனைவிடக் கட்சி நலனே பிரதானமானது” என்பதே கட்சி உறுப்பினர்களின் மிக முக்கியமான கோட்பாடு என்று தெரிவித்தார். லியூ ஷோ சியின் போதனை - சிறந்த கம்யூனிஸ்ட்டின் அடையாளம் “ஒருவருக்கு வாழ்வில் அதிகமான வாய்ப்புகளைப் பெறுகிற நிலை வரும்போது அந்த வாய்ப்பினை - சலுகையை மற்றவர்கள் எல்லோரும் அடைந்த பிறகு இறுதியாக நான் அடைவேன் என்று யார் ஒருவர் சொல்கிறாரோ - ஒரு நெருக்கடி அல்லது தண்டனை என்று வருகிறபோது அந்தத் தண்டனையை மற்ற வர்களைவிட நான் முதலிலேயே ஏற்றுக் கொள்கிறேன் என்று யார் கூறுகிறாரோ அவர்தான் சிறந்த கம்யூனிஸ்ட் என்று மிக அழகாக தோழர் லியூ ஷோ சி கூறுகிறார். நமது தோழர் எஸ்.தங்கராசு அப்படிப்பட்ட கம்யூ னிஸ்ட்” என்று பாலகிருஷ்ணன் பாராட்டு தெரி வித்தார். இளைஞர்களுக்கு வழிவிட்ட எஸ்.தங்கராசு “மாவட்ட செயற்குழு உறுப்பினராக அவர் இருந்தபோதுதான் திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளராக நான் வந்திருக்கிறேன். அப்போது மாவட்ட மாநாடு வந்தது. அதற்காக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் போது திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் களை அதிக அளவில் கட்சிப் பொறுப்பிற்குக் கொண்டு வர வேண்டும், இளைஞர்கள் பொறுப்பிற்கு வந்தால்தான் அடுத்தடுத்த தலைமுறையை நாம் வென்றெடுக்க முடியும் என்று பேசினோம். தோழர் எஸ்.தங்கராசு தனது விவாதத்தில் அதுதான் மிகச் சரியானது என்று கூறினார். பின்னர் ஒரு கூட்டத்தில் இரண்டு மூன்று தோழர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, ‘இளைஞர்களைக் கட்சிப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதாக இருந்தால் என்னை விடுவித்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளேன்’ என்று தோழர் எஸ்.தங்கராசுதான் முதலில் அறிவித்தார். கட்சியின் முடிவை உடனே முதலாவதாக ஏற்றுக்கொண்ட அந்தப் பெருமைக்குரிய தலைவர்தான் தோழர் எஸ்.தங்கராசு” என்று பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். ஆயிரக்கணக்கான தலைவர்களைக்கொண்ட கட்சி “தோழர் எஸ்.தங்கராசு போல ஆயிரக் கணக்கான அப்பழுக்கற்ற ஊழியர்களை - தலைவர்களைக் கொண்ட கட்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்டுகள் நாட்டிற்காக சமூகத்திற்காக உழைப்பாளி மக்களுக்காக எல்லோரும் சமத்துவ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்தியைப் போல தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். “எல்லாவற்றையும்விட அவரது துணைவி யார் நிர்மலா தனது கணவன் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எல்லாக் குடும்பச் சுமைகளையும் தாங்கிக்கொண்டு தோழரின் உயர்விற்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவர்களையும் இத்தருணத்தில் நாம் பாராட்டு கிறோம்” என்று அவரையும் பாராட்டினார். தியாகத்தின் உச்சம் - கம்யூனிஸ்ட் பாரம்பரியம் “கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட நாட்டின் விடுதலைக்காக நாட்டின் நலனுக்காக உழைக்கும் மக்களுக்காகத் தியாகம் செய்தவர்களைப் பார்க்க முடியுமா?” என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். தோழர் எஸ்.தங்கராசு அவர்களுக்கு மாவட்டக் குழுவின் சார்பில் வாழ்த்துக் கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. - பி. தட்சிணாமூர்த்தி