பேராவூரணி அருகே காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர், செப். 25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின் பேரில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள குருவிக்கரம்பை, கரிசவயல், பத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு மருந்துவ முகாம் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனொரு பகுதியாக, எட்டிவயல் கிராமத்தில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பூமா தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செவிலியர் சுகன்யா உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர், அப்பகுதி நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடி, அங்காடி, பள்ளி ஆகிய இடங்களில், பொதுமக்கள், குழந்தைகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை கசாயம் வழங்கினர். மேலும், வீடுகளைச் சுற்றி மழைத்தண்ணீர், கழிவு நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குடிதண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின்னர் அருந்த வேண்டும். தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை எப்பொழுதும் மூடியே வைக்க வேண்டும். எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தினர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், மருத்துவக் குழுவினரின் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.