வேளாண்துறை இயக்குநரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஆக. 28- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆரம்பித்தவுடன் திடீரென விவசாயிகள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, தொடர்ந்து விவசாயிகளை அவதூறாக பேசியும், விவசாயிகள் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வேளாண்மை துறை இயக்குனர் முருகேசனை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள், திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் பாயக்கூடிய பல்வேறு ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை விரைந்து அகற்ற வேண்டும். தாளடி மற்றும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் உரங்கள் தயார் செய்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் எழுப்பினர். மாவட்ட ஆட்சியர், அந்தந்த துறை உயர் அதிகாரிகளிடம் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தினார்.