tamilnadu

நெல் சாகுபடி  ஏக்கருக்கு  ரூ 45 ஆயிரம் கடன் வழங்குக தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

நெல் சாகுபடி  ஏக்கருக்கு  ரூ 45 ஆயிரம் கடன் வழங்குக தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக. 29-   உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து, கடன் வழங்க வேண்டும் என மாவட்ட தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை 2026-2027 ஆம் ஆண்டுக்கான, வகைப்படுத்தப்பட்ட பயிர்களுக்கான பயிர்க் கடன் அளவுகள் நிர்ணயித்தல் குறித்து, மாவட்ட தொழில்நுட்ப குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.  வேளாண்மை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, நபார்டு வங்கி, மாவட்ட முதன்மை வங்கி, சர்க்கரை ஆலை, மீன்வளத்துறை, பட்டுப்புழு வளர்ப்பு துறை அதிகாரிகள், முன்னோடி விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், பயிர்க் கடன் அளவு நிர்ணயம் செய்யும் போது,  மாவட்ட, மாநில தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்வதற்கு முன்னர், வேளாண் பல்கலைக்கழகம் ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்பதை அடிப்படை அளவுகோலாக கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் பார்த்தால் 2025-2026 ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற பயிர் கடன் அளவை காட்டிலும் 30 சதவீதம் பயிர் கடனை உயர்த்தி, ஒவ்வொரு பயிருக்கும் கடன் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்திச் செலவு, இடுபொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.45,000, கரும்புக்கு ரூ.1.10 லட்சம், வாழைக்கு ரூ.1.5 லட்சம் கடனளவு நிர்ணயம் செய்ய வேண்டும். வெற்றிலை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.18 லட்சம் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.  விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை, மாநில கூட்டத்துக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.