tamilnadu

img

எத்தொழில் செய்யினும் மேன்மை


கோவி.பால.முருகு

எத்தொழில் செய்யினும் மேன்மை-அதை
        ஏளனம் செய்வது கீழ்மை!
அத்தொழில் தன்னில் நேர்மை-நீ
        அடைவாய்  புகழின் பெருமை!

செருப்பு தைக்கும் தொழிலால்--காலுக்கு
         சேர்ப்பார்  கலையின் எழிலால்!   
மேலணி  ஆடை நெய்வார் -அவர் 
          மேலான  தொழிலைச் செய்வார்! 

சலவை    செய்யும்  தொழிலாம் -அதைச்
        செய்திடும்  வாழ்க்கை எழிலாம்!
தலைமுகம்  வளரும்  மயிரை -மழித்துத்
        தருவார்  அழகின் உயிரை!

ஈக்கள் மொய்க்கும்   கழிவு- கையால்
        எடுப்பவர் வியர்வை  உயர்வு !
சாக்கடைத் தூய்மைச் செய்வார்-அவர் 
         சகலரும்   போற்றச் சிறப்பார்! 

குப்பை பொருக்கி வாழும்-மக்கள்
         குடல்பசி அதனால் தீரும்!
அப்பணி தன்னால் ஊரும்-நல்ல
         அழகுறும் நோய்பிணி தீரும்!

நேர்மை  கொண்ட உழைப்பு- எதிலும்
      நேரா  திருக்கும் இழப்பு! !
பார்வை தன்னில் உயர்வாய்-அவர்
      பற்றிய தொழிலைக் காண்பாய்!