குறவன் இன மக்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடுக!
சேலம், செப். 13 - குறவன் இன மக்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு சேலத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. முன்னதாக, சேலம் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள அம்பேத்கர் சிலை பகுதியிலிருந்து துவங்கிய பேரணியை மருத்துவர் ம. கருணாகரன் துவக்கி வைத்தார். இதையடுத்து சிறை தியாகிகள் நினைவு இல்லத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.கே. தணிகாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். புகழேந்தி வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி அஞ்சலி திருமணத்தை முன்மொழிந்தார். மாநில பொதுச்செயலாளர் ஏ.வி. சண்முகம் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் வி. வேலு வரவு - செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், “குறவன் இன மக்களுக்கு தனி நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும்; 26 பிரிவாக உள்ளதை நீக்கம் செய்து, பழங்குடி சான்றிதழ் வழங்க வேண்டும்; குறவன் இன மக்கள் மீதான காவல் துறையினரின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க காலப் பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி-க்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவராக வி.கே. தணிகாசலம், பொதுச்செயலாளராக ஏ.வி. சண்முகம், பொருளாளராக எம். புகழேந்தி, துணைத்தலைவர்களாக குப்பன், ஜெயந்தி, பாலசுப்பிரமணியம், முருகன், துணைச்செயலாளர்களாக டாக்டர் ம. கருணாகரன், டி. சிவசங்கர், ரமேஷ்பாபு, வேலு உட்பட 27 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் டி.தினகரன் நன்றி கூறினார்.