tamilnadu

img

காவல்துறை சித்ரவதைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுக!

காவல்துறை சித்ரவதைகளைத்  தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுக!

அரசுக்கு கே. பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

நாகப்பட்டினம், ஜூலை 3 - காவல்துறை சித்ரவதைச் சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு அலுவலகத்தில், கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இவ்வாறு தெரிவித்தார். ஜூலை 9 அகில இந்திய வேலைநிறுத்தம் வெற்றிபெறும் தொடர்ந்து பேசிய அவர், “ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன” என்று கூறினார். டெல்டா மாவட்டங்களின் பொருளாதார நிலை காவிரி டெல்டா மாவட்டங்களின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்த கே. பாலகிருஷ்ணன், “சோழமண்டலம் சோறுடைத்து என்று புகழப்பட்ட டெல்டா மண்டலம் மிகப்பெரிய வறுமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் இளைஞர்கள் தங்குவதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டிருக்கிறது” என்றார். “தனிநபர் வருமானத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. முப்போகம், இருபோகம் விளைந்த மண்ணில் ஒருபோகம் கூட விளைவிக்க முடிகிறதா என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர்” என்று அவர் தெரி வித்தார். “இந்தப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வேளாண்மை சார்ந்த திட்டங்களுடன் சிறு-குறு தொழில்கள் குறித்த திட்டங்களும் அதிகப்படுத்தப்பட வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். திருப்புவனம் சம்பவம் - கடுமையான கண்டனம் திருப்புவனம் சம்பவம் குறித்து பேசிய அவர், “இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் எப்படி தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளே கேள்வி எழுப்பியுள்ளனர்” என்றார். “கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான மரணங்கள் காவல்துறை காவலில் நிகழ்ந்துள்ளன. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களை அடித்து சித்ரவதைப்படுத்தி கொலை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல” என்று அவர் தெரிவித்தார். சாத்தான்குளம், அம்பாசமுத்திரம், நெய்வேலி சுப்பிரமணியன் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இன்னும் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கான விசாரணைக் காலம் நீண்டுகொண்டே செல்வதாக கவலை தெரிவித்தார். “ஐக்கிய நாடுகள் சபையில் சித்ரவதை தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. நாட்டுக்கே முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் முன்னோடியாக திகழ வேண்டும்” என்று அவர் கூறினார். “சித்ரவதை தடைச் சட்டத்தை இயற்றி இந்திய நாட்டிற்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். மாநில அரசின் உடனடி நடவடிக்கை திருப்புவனம் சம்பவத்தில் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “மாநில அரசு இந்த வழக்கை கவனமாக கையாளுகிறது” என்றும் அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது, கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.