பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றிடுக! மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்
மயிலாடுதுறை, ஜூலை 16- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள டி. மணல்மேட்டில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய 15 ஆவது மாநாடு ஒன்றிய தலைவர் பி. ஷண்முகவள்ளி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் குணசுந்தரி வரவேற்று பேசினார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஜெயலட்சுமி சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். சங்கத்தின் முன்னாள் மாநில இணைச் செயலாளர் ஜி. கலைச்செல்வி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலையறிக்கையை ஒன்றியச் செயலாளர் டி. ஆர். ராணி வாசித்தார். மாநாட்டினை வாழ்த்தி மாதர் சங்க செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கண்ணகி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கார்த்திகேசன் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றிய தலைவராக டி.ஆர்.ராணி, செயலாளராக பி.ஷண்முகவள்ளி, பொருளாளராக பி.குணசுந்தரி, துணைத் தலைவராக அருள், துணைச் செயலாளராக செல்வபாக்யவதி உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய 14 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றிடுக!, நூறு நாள் வேலையையும்,சட்டக் கூலியையும் முழுமையாக வழங்கிடுக என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா நிறைவுரையாற்றினார். விமலா நன்றி கூறினார்.