tamilnadu

img

பறக்க முடியாமல் பரிதவிக்கும் கழுகுகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

வழுக்கைத்தலை கழுகு (balled eagle). அமெரிக்கா வின் தேசியப்பறவை. இப்பறவை அந்நாட்டின்  தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. சூழல் சீரழிவுகளுக்கு இன்று இரையாகித் தவிக்கிறது. 2007ஆம் ஆண்டில் மட்டுமே இது அமெரிக்காவில் இன அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டது. இவற்றில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை ஈயம் என்ற நச்சு உலோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் இது தொடர்பான  ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முன்பு மிக அதிக அளவில் டிடிடி டை குளோரோடை பிணைல்  டிரைகுளோரோ ஈதேன் (di choloro di phenyl tri choloro ethane DDT) என்ற நஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. 1972இல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பூச்சிக்கொல்லி நச்சு தடை செய்யப்பட்ட பின் இன  அழிவின் விளிம்பில் இருந்த இப்பறவைகளின் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்தது.

இறக்கைகளை முடக்கும் ஈயம் என்ற நஞ்சு

என்றாலும் இந்த மாற்றத்திற்கு ஆயுசு அதிக காலம் இல்லை. இப்பறவைகளுக்கு இப்போது மீண்டும் ஒரு அச்சுறுத்தல் ஈயம் என்ற மோசமான நஞ்சின் மூலம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று கலிபோர்னியா முதல் புளோ ரிடா வரை உள்ள 38 மாகாணங்களில் நச்சு பாதிப்பு பரவி யுள்ளது. பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட கழுகுகளில் 46  சதவீதம் பறவைகளின் எலும்புகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத் தும் அளவில் ஈயம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2010 முதல் 2018 வரை 1200 பறவைகளின் இரத்தம், எலும்பு,  கல்லீரல், திசுக்களில் அதிக அளவில் ஈயத்தின் அம்சம் இருந்தது தெரியவந்தது. ஒரு வனவிலங்கு ஈயத்தினால் எந்த அளவு மோசமாக  பாதிக்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவது இதுவே முதல்முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற னர். கழுகுகளில் 50 சதவிகிதத்திற்கும் கூடுதலானவை ஈயத்துடன் நிரந்தரமான தொடர்பு கொண்டிருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்களிடையில் அச்சத்தையும், கவலையையும் ஏர்படுத்தியுள்ளது. மாசுபட்ட மண், தாவரங்கள், நீர் ஆகியவற்றில் இருந்தே  பறவைகளின் உடலில் ஈயம் சேர்கிறது. இந்த நச்சு உலோகம் அடங்கியுள்ள உணவுகள் இத்தகைய பாதிப்பு ஏற்பட மற்றுமொரு முக்கியக்காரணம். ஈயம் நியூரோடாக்சின் என்ற  நாடி நரம்புகளை பாதிக்கும் நஞ்சு. இது கழுகின் உடல் நலத்தை தாறுமாறாக்குகிறது. பறப்பதற்குள்ள திறனைக் குறைக்கிறது. மற்ற திறன்களையும் பாதிக்கிறது.

குறையும் கழுகுகள் அதிகரிக்கும் சூழல் சீர்கேடு

ஈயத்தின் பாதிப்பினால் வழுக்கைத்தலைக் கழுகுகளின்  எண்ணிக்கையில் 4 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. தங்கக் கழுகுகளின் (Golden eagle) எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்துள்ளது. காலநிலை மாற்றம், தீவிர நோய்கள் போன்றவற்றை எதிர்த்து நின்று சமாளித்து வாழும் கழுகுகளின் சக்தியை ஈயம் என்ற இந்த பயங்கர நஞ்சு குறைத்துவிடுகிறது. ஈயத்தினால் இவ்வாறு பாதிக்கப்படும் கழுகுகள் ஒரு குரிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே இருந்ததாக முன்பு தவறாக  கருதப்பட்டது. மிதமிஞ்சிய அளவில் ஈயத்தால் பாதிக்கப்பட்ட  கழுகுகளுக்கு சிகிச்சை அளித்து அழிவில் இருந்து அவற்றை மீட்பது சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்கள் ஈயத்தின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தினால் மட்டுமே கழுகுகளைக் காப்பாற்றமுடியும் என்று சூழல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.