tamilnadu

அவுட்சோர்சிங் முறையை கைவிடுக!

சென்னை, மே 28- அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு வலியுறுத்தினார். அகில இந்திய கோரிக்கை நாளையொட்டி, நாடு முழுவதும் ‘கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கியிருக்கும் இந்தியாவை பாதுகாப்போம்”என்ற முழக்கத்தோடு மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டங்கள் சனிக்கிழமை (மே 28) நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் மு.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் 40 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் ஊதிய உயர்வுக்கான போராட்டம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தக் கூடிய மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் 20 லட்சமாக குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் முதலாளித்துவ கொள்கையால் நாடு முழுவதும் அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறை புகுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேலை வாய்ப்பு பதிவு அலுவலகம் இருந்தாலும் அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. நாடு முழுவதும் நீதிபதிகளை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏறக்குறைய 30 விழுக்காடு அரசு ஊழியர்கள் அத்துக்கூலிகளாக பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டதை எதிர்த்து கடந்த ஆட்சியில் போராட்டங்கள் நடத்தினோம். அப்போது இன்றைய முதல்வர் எங்கள் போராட்ட களத்திற்கு வந்து அதிமுக அரசு பறித்த அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். அதை ஏற்று அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு கடந்த பிறகும், இதுவரை நிறைவேற்றவில்லை. முதல்வர் சமூக நீதி குறித்து பேசுகிறார். நிதியமைச்சர் கார்ப்பரேட் முதலாளித்துவம் குறித்து பேசுகிறார். முதல்வர் முன்னிலையிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறுகிறார். இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில் தமிழக முதல்வர் வரும் 31ஆம் தேதிக்குள் அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஞாயிறன்று (மே 29) மதுரையில் 64 சங்கங்கள் பங்கேற்க கூடிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.